ரூ.14.27 கோடியில் 11 சார்பதிவாளர் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்; 15 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்

சென்னை: ரூ.14.27 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 11 சார்பதிவாளர் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும் 15 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சார்பதிவாளர் அலுவலங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அளித்திடவும், பணியாளர்களின் பணியை எளிமைப்படுத்தும் வகையிலும், வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை பதிவு மண்டலத்தில் ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் சேலையூர் சார்பதிவாளர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், ரூ.94 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆலந்தூர் சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடம் மற்றும் ரூ.1 கோடியே 72 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலவாக்கம் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம், அதேபோல் திருநெல்வேலியில் விக்கிரமசிங்கபுரம், வேலூரில் நெமிலி, தஞ்சாவூரில் மதுக்கூர், திருச்சியில் இரும்புலிக்குறிச்சி, கடலூரில் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தலா ரூ.1 கோடியே 72 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் மதுரை பதிவு மண்டலத்தில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடமலைகுண்டு சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம், திருநெல்வேலி பதிவு மண்டலத்தில் ரூ.93 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடம்,  வேலூர் பதிவு மண்டலத்தில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள களம்பூர் சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடம், கடலூரில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் விருத்தாசலம் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகக் கட்டிடம் என மொத்தம் ரூ.14 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் விருத்தாசலம் மாவட்ட பதிவாளர் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், பதிவுத்துறையின் மென்பொருளோடு சென்னை மாநகராட்சியின் சொத்து வரி பெயர் விவரங்கள் அடங்கிய மென்பொருளும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் தண்ணீர் வரி மென்பொருளும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் கட்டணம் செலுத்துவோர் விவர மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளன. சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பரிவர்த்தனை நடக்கும் போது சென்னை மாநகராட்சிக்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் சொத்து வரி ரசீது, தண்ணீர் வரி ரசீது மற்றும் மின் கட்டண ரசீது தொடர்பான பெயர் மாற்ற விவரங்கள் தானாகவே இணைய வழியாக அனுப்ப ஏதுவாகும் திட்டத்தினை முதல்வர் துவக்கி வைத்தார்.

பதிவுத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 5 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.அப்போது,  வணிகவரி மற்றும் பதிவுத்  துறை அமைச்சர் மூர்த்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு, வணிகவரி மற்றும்  பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள்  உடனிருந்தனர்.

Related Stories:

More