ஒருங்கிணைப்பாளர் பதவியை கைப்பற்றியதை தொடர்ந்து அடுத்த பஞ்சாயத்துக்கு தயாராகிறார் ஓபிஎஸ்: மாவட்ட செயலாளர், தலைமை கழக நிர்வாகிகளிலும் ஆதரவாளர்களை நியமிக்க எடப்பாடிக்கு நெருக்கடி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை கைப்பற்றியதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அடுத்த பஞ்சாயத்துக்கு தயாராகி வருகிறார். அதன்படி, மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளை மாற்றியமைக்கும்போது தனது ஆதரவாளர்களை பாதிக்குப்பாதி நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளார். அதிமுகவில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவி வகித்தார். ஆனால் சசிகலா அவரை மாற்றி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். எடப்பாடி ஆட்சியை கைப்பற்றியதுடன், கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. பின்னர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஓபிஎஸ் வர ஆசைப்பட்டார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, அவரை பின்னுக்கு தள்ளி அந்த பதவியை கைப்பற்றினார். தொடர்ந்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கப்பட்டு வந்ததால் விரக்தி அடைந்தார்.

இந்த நிலையில்தான், அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளரானார். இதன்மூலம் அதிமுக கட்சியை கைப்பற்றும் முயற்சியில் எடப்பாடி தோல்வி அடைந்தார். ஓ.பன்னீர்செல்வம் கை தற்போது கட்சியில் ஓங்க தொடங்கியுள்ளது. இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்த செங்கொட்டையன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் கூட ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க தொடங்கி உள்ளனர்.

இதை பயன்படுத்தி கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவும், படிப்படியாக அதிமுகவில் மீண்டும் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டம் தீட்டி வருகிறார். இதுகுறித்து, தனது ஆதரவாளர்களுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் முதல் கட்டமாக,  எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டிய பல மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களை கொண்டு வருவது என்று ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இதன்படி மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளில் ஆளுக்கு 50/50 என்ற பார்முலா படி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் மூலம் மறைமுகமாக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

அதிமுக மாவட்ட செயலாளர்களை மாற்ற வேண்டும் என்று எடப்பாடியிடமும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதனால் மாற்ற வேண்டிய மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பலருக்கு மாநில நிர்வாகிகள் பதவிகள் வழங்கப்பட உள்ளன. இதனால் மாநில நிர்வாகிகளும் மாற்றம் செய்யப்பட உள்ளனர். ஆனால் மாற்றப்பட வேண்டியவர்களுக்கு பதில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்தான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இருவரும் தங்களது ஆதரவாளர்களை நியமிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். சில மாவட்ட செயலாளர்கள், தங்களை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கட்சி தலைமை தூக்கினால் ஆதரவாளர்களுடன் மாற்று கட்சிக்கு சென்றுவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளை மாற்ற முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் தனது கோரிக்கையில் உறுதியாக உள்ளார். இந்தவிவகாரத்தில் இருவருக்கும் இடையே மோதல் முற்றியதால் மூத்த தலைவர்கள் இருவரையும் சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், கட்சியில் யார் பெரியவர் என்ற பிரச்னையில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகிய இருவரும் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன்மூலம், அதிமுக உள்கட்சி மோதல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கட்சியில் யார் பெரியவர் என்ற பிரச்னையில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகிய இருவரும் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: