தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு கூட ‘பிளாஸ்மா’ சிகிச்சை அளிக்க வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பாரிஸ்: தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு கூட ‘பிளாஸ்மா’ சிகிச்சை அளிக்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடமிருந்து ரத்தத்தின் கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் 500 மி.லி ‘பிளாஸ்மா’ பெறப்பட்டு நோயின் தன்மை மிதமாக உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ‘பிளாஸ்மா’ செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இரத்த அணுக்களும் அதிகரிக்கிறது. இதனால் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடல் தயாராகிறது.

இந்த முறையை கொரோனா முதலாவது, இரண்டாவது அலையின் போது பல நாடுகளும் பின்பற்றின. ஆனால் தற்போது சில நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அல்லது நான்காவது அலை வேகமாக பரவி வருவதால், பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அவசியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரம் தற்போது உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகளின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை, தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட லேசான அல்லது மிதமான நோயாளிக்கு வழங்கப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு வழியாக வழங்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க ஆரம்ப காலகட்டத்தில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்தது. ஆனால், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆலோசனை அடிப்படையிலும், சமீபத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும் பார்க்கும் போது பிளாஸ்மா சிகிச்சை அவசியமில்லை என்றே தெரிகிறது. மேலும் இந்த சிகிச்சை முறையால் அதிகம் செலவு ஆவது மட்டுமின்றி, அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது.

அதனால், கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களின் ரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்தக் கூடாது. கடுமையான மற்றும் சிக்கலான நோயாளிகளுக்கு கூட, மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மேற்கண்ட முடிவானது, கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 16,236 நோயாளிகளை 16 வகையான சோதனைகள் செய்து பார்த்ததின் அடிப்படையில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: