செய்முறை தேர்வுக்காக இரவில் பள்ளிக்கு வரச்சொல்லி போதை பொருள் கொடுத்து 17 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளியின் உரிமையாளர்கள் 2 பேர் கைது

மீரட்: உத்தரபிரதேசத்தில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 17 மாணவிகளை இரவில் பள்ளிக்கு வரச்சொல்லி அவர்களுக்கு போதை பொருள் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பள்ளியின் உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் அடுத்த புர்காஜியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவியருக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. பள்ளியின் உரிமையாளர் வேண்டுகோளுக்கு இணங்க பத்தாம் வகுப்பு படிக்கும் 17 மாணவிகளை செய்முறை தேர்வுக்காக (லேப்) இரவு நேரத்தில் பள்ளிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி மாணவிகளும் கடந்த நவம்பர் 20ம் தேதி இரவு பள்ளிக்கு வந்தனர். அவர்கள் செய்முறை தேர்வுக்காக லேப்பில் இருந்த போது, அவர்களுக்கு போதை ெபாருள் கொடுக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் மயக்கமுற்ற மாணவிகளுக்கு பள்ளியின் உரிமையாளர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவிகளில் சிலர் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடந்த 4ம் தேதி  முசாபர்நகர் போலீஸ் எஸ்பி அபிஷேக் யாதவிடம், கிராம தலைவரை அழைத்துச் சென்று புகார் அளித்தனர். இதற்கிடையே உள்ளூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெற்றோர் புகார் கொடுத்தும் உடனடி நடவடிக்கை எடுக்காததால் போலீஸ்காரர்கள் விஜாவர்கியா, கிரிஷான் குமார் பிஷ்னோய் ஆகியோரை எஸ்பி சஸ்பெண்ட் செய்தார்.

இதுகுறித்து எஸ்பி அபிஷேக் யாதவ் கூறுகையில், ‘பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து இரண்டு பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்;  புகார் கொடுத்த இரண்டு பெற்றோர்களையும், பள்ளி உரிமையாளர்கள் அழைத்து  மிரட்டல் விடுத்துள்ளனர். விசாரணையில் பள்ளியின் உரிமையாளர்கள் யோகேஷ் குமார், அர்ஜுன் சிங் ஆகியோர் மாணவிகளுக்கு போதை பொருளை கொடுத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் மீது ஐபிசி மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளோம்.

மீதமுள்ள 15 மாணவிகளின் பெற்றோர் புகார் அளிக்கவில்லை என்பதால், மேற்படி குற்றச்சாட்டுகள் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. இவ்விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: