ஐயப்ப பக்தர்கள் வருகையால் பழநியில் ஸ்வெட்டர் விற்பனை அதிகரிப்பு

பழநி: ஐயப்ப பக்தர்கள் வருகை காரணமாக பழநியில் ஸ்வெட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. கார்த்திகை மாதம் துவங்கி உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை வருகை அதிகரித்து உள்ளது. இதனைத்தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம், விடுமுறை தினம் என 6 மாத காலம் பழநி நகரில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக அடிவாரப் பகுதிகளில் ஏராளமான அளவில் பொம்மைக் கடைகள், பிளாஸ்டிக் மற்றும் பேன்சி பொருள் கடைகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் பொம்மைகள், மத்தளம், மூங்கில் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய பழநி நகருக்கு வருவது வழக்கம். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கியதையடுத்து, அடிவார பகுதியில் ஏராளமான ஸ்வெட்டர் கடைகள் தோன்றியுள்ளன. வழக்கமாக கொடைக்கானல் மற்றும் ஊட்டி பகுதிகளில் அதிகளவில் ஸ்வெட்டர்கள் விற்பனை செய்யப்படும். இந்த முறை ஐயப்ப பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதியில் ஏராளமான அளவில் கடைகள் முளைத்துள்ளன.

ரூ.100ல் துவங்கி ரூ.700 வரையிலான விலைகளில் ஸ்வெட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு வண்ணங்களில், பலவித வடிவங்களில் விற்கப்படுகின்றன. குழந்தைகளை கவரும் வகையில் புகழ்பெற்ற கார்டூன்களான டோரா, சோட்ட பீம், மோட்டு, பட்லு படங்கள் பொறித்த ஸ்வெட்டர்களை அதிகளவு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடும் குளிரின் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் ஸ்வெட்டர்கள் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

Related Stories: