விழுப்புரம் அருகே இன்று அதிகாலை பயங்கரம்; தாய், மகள் கொடூர கொலை: மர்ம ஆசாமிகள் வெறிச்செயல்

திருபுவனை: விழுப்புரம் அருகே தாய், மகளை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம கண்டமங்கலம் அருகே கலித்திரம்பட்டு கண்டப்பசாவடி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மனைவி சரோஜா (80). இவரது மகள் பூங்காவனம் (60). பூங்காவனத்தை 30 வருடங்களுக்கு முன்பு அம்மணங்குப்பத்தில் திருமணம் செய்து கொடுத்தனர். இவரது கணவர் தங்கவேலுவை பிரிந்து மகள் வள்ளியுடன் (29) தாய் வீட்டிற்கு வந்து வசித்து வந்தார். நேற்றிரவு வள்ளி உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் சரோஜாவும், பூங்காவனமும் தனியாக படுத்து தூங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியவில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், அரை பவுன் கம்மல் என ஒன்றரை பவுன் நகையை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். இன்று காலை அவர்கள் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தாய், மகள் இருவரும் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் போலீசார் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலாத்கார முயற்சியில் கொலை நடந்ததா?

கலித்திரம்பட்டு பகுதியில் நேற்றிரவு மழை பெய்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள செங்கல் சூளையில் கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை சேர்ந்த நாகலிங்கம், அவரது மனைவி அம்சம்மாள் ஆகியோர் கலித்திரம்பட்டு கடைவீதியில் உள்ள ஒரு கடையில் மழைக்கு ஒதுங்கியுள்னர். அங்கு சென்ற மர்ம நபர்களில் ஒருவன் அம்சம்மாளை கட்டிப் பிடித்துள்ளான். அப்போது, அவர் கூச்சல்போடவே, ஆத்திரமடைந்து, அம்சம்மாளை தடியால் பலமாக தாக்கியுள்ளான்.

இதில் படுகாயம் அடைந்த அம்சம்மாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ைச பெற்று வருகிறார். இதேபோன்று சரோஜா, பூங்காவனம் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்துவிட்டு பலாத்கார முயற்சியில் ஈடுபட்டபோது, இருவரும் சத்தம்போட்டதால் தடியால் அடித்து கொலை செய்திருக்காலம் என தெரிகிறது. போலீசார் விசாரணை முடிந்த பிறகே கொலைக்கான முழு காரணம் தெரிய வரும்.

கோயில் உண்டியல்கள் உடைப்பு

இந்த மர்ம நபர்கள் நேற்றிரவு கலித்திரம்பட்டில் உள்ள அம்மன் கோயில், வம்புப்பட்டில் உள்ள அம்மன் கோயில் மற்றும் அய்யனாரப்பன் கோயில் என 3 கோயில்களின் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கிராம பகுதியில் உள்ள கோயில் என்பதால் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவாகவே பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Related Stories: