புதுச்சேரியில் முதலமைச்சர், தலைமை செயலாளர் இடையே மோதல்?: மழை பாதிப்புக்கு நிவாரணம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் ,தலைமை செயலாளர் இடையே மோதல் காரணமாக சட்டமன்றத்தில் அறிவித்த மக்கள்நல திட்டங்கள் மற்றும் மழை நிவாரணம் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக புகார்  எழுந்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ,பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து முதலாவதாக வந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

தீபாவளி முடிந்து பொங்கல் நெருங்கும் நிலையில் இன்னும்  இலவச அரிசி,சர்க்கரை வழங்கபடவில்லை.புதுச்சேரியில் கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கபட்டிருப்பதால் 5000 ரூபாய் நிவாரணம் ,விவசாய நிலங்கள், வீடுகளுக்கு உரிய நிவாரணம்  எப்போது கிடைக்கும் என்று மக்கள் தவிப்பில் உள்ளனர்.முதலமைச்சருக்கும், தலைமை செயலாளருக்கும்  மோதல் போக்கால்  புதுச்சேரி மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக  சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சட்டபேரவையில்  ரங்கசாமி அறிவித்த மக்கள்நல திட்டங்கள் எதுவும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் தொகுதிகளின்  எம்.எல்.ஏ-களிடம் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

இதனை அடுத்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-கள்  மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ-கள் தலைமை செயலாளர் அஸ்வினிகுமாரை முற்றுகை இட்டு புகார் தெரிவித்தனர். மேலும், மாநிலத்தில் 25 ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ், எம்.எல்.ஏ-கள் இருந்தும் கனமழை காலத்தில் ஒருவர் கூட களப்பணி செய்யவில்லை என்று எம்.எல்.ஏ-கள் புகார் தெரிவித்தனர். காலிப்பணி இடங்களை  நிரப்புவதிலும் தலைமை  செயலாளர் எதிராக இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தலைமை  செயலாளர் மூலம் புதுச்சேரி  அரசுக்கு ஒன்றிய அரசு தடையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் டெல்லி சென்று பிரதமர் மோடியை  சந்திப்பதை ரங்கசாமி தவிர்ப்பதும் மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.   

Related Stories: