அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி விவகாரம் முடிந்தது அடுத்த பஞ்சாயத்துக்கு தயாராகிறார் ஓபிஎஸ்: நிர்வாகிகள் நியமனம் குறித்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க முடிவு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி நியமனம் முடிந்துள்ளதால், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளை மாற்றியமைப்பது குறித்து அடுத்த கட்ட முன்னெடுப்புகளைச் செய்து, தனது பதவியை கெட்டியாக பிடித்துக் கொள்ள ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவில் தற்போது இரட்டைத் தலைமை முறை நீடித்து வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த காலம்போல ஒற்றைத் தலைமை முறையாக மாற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்தார். கடந்த அதிமுக ஆட்சி முடியும் நேரத்தில், அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி தன்னை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

ஆனால் ஓபிஎஸ் ஒரு முறைதான் முதல்வர் பதவிக்கு தான் சம்மதித்ததாகவும், தற்போது தனக்கு அந்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். ஆனால் எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆதரவு அதிகமாக இருந்ததால், முதல்வர் வேட்பாளர் வாய்ப்பு எடப்பாடிக்கு கிடைத்தது. கடைசி வரை போராடி தோல்வியடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இருவரும் கேட்டனர். அப்போதும் அதிக எம்எல்ஏக்கள் ஆதரவைக் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றினார்.

அதைத் தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் என்பதற்கு பதிலாக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றிவிட்டு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவைத் தலைவர் பதவியை கொடுக்க திட்டம் தீட்டி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இது தெரிந்ததும், உஷாரான ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆதரவு நிலையை எடுத்தார். அதை வெளியில் பேட்டியாக கொடுத்ததும், அவர் எதிர்பார்த்ததுபோல தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் அணி திரண்டனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. அதோடு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் உள்ளிட்ட சில தலைவர்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனால், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர பொறுப்பாளர்களைக் கொண்ட பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என்ற முடிவை எடுக்க முடியாமல் திணறினார். அப்போதுதான் வேறு வழி இல்லாமல் இறங்கி வர வேண்டிய சூழ்நிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி தள்ளப்பட்டார். இதனால் பழையபடியே ஒருங்கிணைப்பாளர்கள் என்ற நிலையே தொடர சம்மதித்தார். இதில் வெற்றி கண்டதும் தனது நிலையை உறுதியாக்கிக் கொள்ள முடிவு செய்த ஓ.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பதவிகளை தனது ஆதரவாளர்களை நிரப்ப முடிவு செய்தார்.

இதற்காக தேர்தல் தோல்வி ஏற்படக் காரணமாக இருந்ததாக மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் உள்ளிட்ட தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் பேச வைத்தார். இப்போது அதைக் காரணம் காட்டி எடப்பாடிக்கு வேண்டிய பல மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிட்டு தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களை கொண்டு வருவது என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டம் தீட்டியுள்ளார். இதனால் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளில் ஆளுக்கு 50/50 என்ற பார்முலா படி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதற்காக மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும் என்று எடப்பாடியிடம் கூறியுள்ளார். இதனால் மாற்ற வேண்டிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் பலருக்கு மாநில நிர்வாகிகள் பதவிகள் வழங்கப்பட உள்ளன. இதனால் மாநில நிர்வாகிகளும் மாற்றம் செய்யப்பட உள்ளனர். ஆனால் மாற்றப்பட வேண்டியவர்களுக்குப் பதில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்தான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இருவரும் தங்களது ஆதரவாளர்களை நியமிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதனால் நியமனங்கள் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இருவரும் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.

அதில் மோதல் முற்றிய பிறகு மூத்த தலைவர்கள் இருவரையும் சமாதானம் செய்வார்கள். அப்போது பங்கு பற்றி பேசலாம் என்று இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அடுத்த கட்ட மோதலுக்கு இருவரும் தயாராகி வருவதாக கூறப்படுவதால் அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: