அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு; ‘நீதிமன்ற தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன்’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு ஏர்இந்தியா விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவின் சட்டதிட்ட விதிகளின்படிதான், கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெற ஆரம்பித்துள்ளது.

முதல் கட்டமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கட்சியின் சட்ட விதிகளின்படியும், தர்மத்தின்படியும் நடந்து முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல் அனைத்தும் நடந்து முடியும். இந்த தேர்தலை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான். அதிமுக வட்ட செயலாளர்கள், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து உறுப்பினர் கார்டுகளை பெற்று சென்றுள்ளனர். அந்தந்த உறுப்பினர்களிடம், அவர்களின் கார்டுகளை முறையாக வழங்கிட வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

Related Stories: