இல்லம் தேடி கல்வி இரண்டாம் கட்ட பயிற்சி தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாததால் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியை  சரி செய்யும் வகையில் இல்லம் தேடி கல்வி என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்க இந்த  ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த கலைக் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக இந்த திட்டம் மீதம் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த திட்டத்தில் இணைந்து செயல்படும் சமூகப் பணி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வித்துறை அலுவலர்களுக்கு ஒரு நாள் அறிமுக பயிற்சி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தொடங்கியது. இந்த அறிமுகப் பயிற்சியில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர்,  திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து ஒரு உதவித் திட்ட அலுவலர், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலா 4 பேர், மற்றும் வட்டார அளவிலான ஆலோசனைக் குழுவில் உள்ள சமூகப்பணி அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தப் பயிற்சியில் இன்று பங்கேற்கின்றனர்.

இந்த பயிற்சியின் போது, கலைக் குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை, குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியுடன்  411 கலைக் குழுக்களுக்கும் பயிற்சி  அளிக்கப்பட்டு 57 ஆயிரத்து 680 இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.  இது வரை 3600 இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இந்த குழுக்கள்  மாவட்டங்களில் கலைப் பயணத்தை தொடரும் முன்பு அந்தந்த  மாவட்ட ஆட்சியர் கொடி  ஏற்றி ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலைக்  குழுக்கள் 1 மணி நேரம் முதல் பாடல், ஒயிலாட்டம், கரகாட்டம், முதலிய  நிகழ்ச்சிகளைநடத்த வேண்டும். தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள்,  மேனிலைப் பள்ளிகளில் நடத்தி தன்னார்வலர்களை ஈர்க்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: