நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் தொடர்ந்து ஆப்சென்ட்; மாற்றிக் கொள்ளுங்கள்; இல்லையெனில் மாற்றம் ஏற்படும்: எதிர்கட்சிகளின் அமளியால் பிரதமர் மோடி அப்செட்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் தொடர்ந்து ஆப்சென்ட் ஆவதால், அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ‘மாற்றிக் கொள்ளுங்கள்; இல்லையெனில் மாற்றம் ஏற்படும்’ என்று கூறினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 23ம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டத் தொடர் தொடங்கிய முதல்நாளில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதற்கடுத்த நாள் முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை எம்பிக்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரியும், வேளாண் சட்டம் வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தி இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 15 அப்பாவி மக்கள் பலியான நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பின. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகாலாந்தில் நடந்த சம்பவம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் மீதமுள்ள நாள்களில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, ஜித்தேந்தர் சிங், அருண் ராம் மெஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘12 எம்பிக்கள் எதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளோம். அவையில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் பார்த்தனர். இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டால் உடனடியாக திரும்பப் பெறப்படும்’ என்றார். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் பாஜக எம்பிக்கள் பலர், அவை நடவடிக்கையில் பங்கேற்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து இன்று நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி, ‘உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்; இல்லையெனில் மாற்றம் ஏற்படும். இதுகுறித்து மீண்டும் மீண்டும் உங்களிடம் கருத்து தெரிவிக்க எனக்கு விருப்பமில்லை’ என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசில், சீன ஊடுருவல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மக்களவையில் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களில் இறந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கோரினார். தொடர்ந்து அவர் மக்களவையில் பேசுகையில், ‘வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இறந்த விவசாயிகள் பற்றிய தகவல்கள் எங்களிடம் உள்ளன. விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து பிற்பகல் வரை அவை நடவடிக்கை தொடங்கின.

Related Stories: