ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையினரின் மெத்தன போக்கால் 2 பேர் மரணம்: அரசு உதவி வழங்க ஓபிஎஸ், எடப்பாடி கோரிக்கை

சென்னை: ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் மரணம் அடைந்துள்ள 2 பேரின் குடும்பங்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:ராமநாதபுரத்தில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்திற்குட்பட்ட காவல் துறையினர் கடந்த 4ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டதாகவும்,

அப்போது அவ்வழியே நீர்க்கோழினேந்தல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சஞ்சய் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்ததாகவும், அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் அவர்களை பின்தொடர்ந்து சென்று விரட்டி பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மாலையில் மணிகண்டனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல் துறையினர் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கோரியுள்ளனர்.

வீட்டிற்கு சென்ற மணிகண்டன் இரவில் தூங்கிய நிலையில் காலையில் மர்மமான முறையில் இறந்ததாக செய்திகள் வந்துள்ளன. இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்கிற விவசாயி அவரது மனைவியுடன் சேர்ந்து நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சுண்டல், போண்டா விற்பனை செய்தபோது, அரகண்டநல்லூர் காவல் துறையினர் அதை தடுத்ததாகவும், இதனை தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வில் உலகநாதன் கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இந்த இரு நிகழ்வுகளிலும் காவல் துறையினர் திறமையாக கையாண்டு இருந்தால் இந்த இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது. காவல் துறையினரின் மெத்தன போக்கிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு மணிகண்டன் மற்றும் உலகநாதன் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற உயிரிழப்புகள் இனி வருங்காலங்களில் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவும், உயிரிழந்தோரின் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு அரசு உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி அறிக்கை

இதேபோன்று, “கல்லூரி மாணவர் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்\” என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: