சீனா குளிர்கால ஒலிம்பிக்கை அதிகாரிகள் அளவில் புறக்கணிப்போம்!: மனித உரிமை மீறலை சுட்டிக்காட்டி அமெரிக்கா அறிவிப்பு..!!

வாஷிங்டன்: சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அதிகாரிகள் அளவில் புறக்கணிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இவ்விளையாட்டு போட்டிகளை அதிகாரிகள் அளவில் புறக்கணிக்கப் போவதாக அமெரிக்காவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர், குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர் என்றும் ஆனால் இப்போட்டிக்கான கொண்டாட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிகாரிகள் யாரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் இதே ரீதியில் சீனாவுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளன. சீனாவில் உய்குர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் சித்ரவதை மற்றும் படுகொலைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை கண்டித்து பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என மனித  உரிமை ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அதே வேளையில் சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குச் சரியான எதிர்வினை கிடைக்கும் என எச்சரித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கழகம் கூறுகையில், விளையாட்டு போட்டிகளுக்கு வீரர் மற்றும் வீராங்கனைகளை அனுப்புவதும், அனுப்பாததும் அந்தந்த நாடுகளின் விருப்பம் ஆகும்.  இதில் நாங்கள் தலையிட முடியாது என தெரிவித்துள்ளது. 

Related Stories:

More