பள்ளி மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: ரவுடிக்கு சரமாரி அடி, உதை

திருமலை: பள்ளி மாணவிகளை வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ரவுடியை அப்பகுதி மக்கள் சரமாரியாக அடித்து, உதைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் மல்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னாராவ் (41), ரவுடி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் மீது அப்பகுதி மக்களை மிரட்டுவது, தகராறு செய்வது, வழிப்பறி உள்பட குற்றவழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாம். மேலும் இவர் அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அடிக்கடி நைசாக பேசுவாராம்.

அப்போது புத்தகங்கள், பேனாக்கள் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து செல்வாராம். இதை நம்பி அவரது வீட்டுக்கு செல்லும் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்வாராம். இவ்வாறு பல மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த மாணவிகளிடம் இங்கு நடந்தவற்றை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் கூறினால் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற அச்சத்தால் பல மாணவிகள் இதை மறைத்துள்ளனர். இதனால் சின்னாராவ் சில்மிஷத்தை தொடர்ந்து செய்துள்ளார். மேலும் சின்னாராவின் மகளும் இதே பள்ளியில் படிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி, தனக்கு டியூஷன் நடத்தும் ஆசிரியரிடம் நடந்த சம்பத்தை கூறி கதறி அழுதுள்ளார். அவருக்கு ஆறுதல் கூறிய டியூஷன் ஆசிரியர், மாணவிகளின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு கடும் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள், நேற்று சின்னாராவின் வீட்டிற்கு கும்பலாக சென்றனர். அப்போது வீட்டில் இருந்த சின்னாராவை வெளியே இழுத்து வந்து, நடுரோட்டில் சரமாரியாக  அடித்து உதைத்தனர். இதில் ரத்தக்காயம் அடைந்த சின்னாராவ், தன்னை தாக்கியவர்களையும் மிரட்டியுள்ளார். இதனால் மேலும் சரமாரி அடி, உதை விழுந்தது.

இதுகுறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு சிலர் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் இருந்த சின்னாராவை மீட்டு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More