வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் பட்டியலை மக்களவையில் வெளியிட்டார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி..!!

டெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்த தரவுகள் இல்லை என்று ஒன்றிய அரசு கூறிய நிலையில், உயிரிழந்த விவசாயிகள் பட்டியலை மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தாக்கல் செய்துள்ளார். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தரப்பட்ட இழப்பீடு குறித்து நவம்பர் 30ம் தேதி மக்களவையில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளை அரசு கண்காணிக்கவில்லை.

எனவே அதற்கான தரவுகள் இல்லாததால் இழப்பீடு குறித்த கேள்வியே எழவில்லை என்று கூறினார். இந்நிலையில் மக்களவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் பட்டியலை தாக்கல் செய்தார். வேளாண் சட்ட ரத்து அறிவிப்பின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தவறு இழைத்துவிட்டதாக கோரி மன்னிப்புகோரிய பிறகும் உயிரிழப்புகள் இல்லை; தரவுகள் இல்லை என ஒன்றிய அரசு கூறுவது தவறு என்றும் ராகுல் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் சேகரித்துள்ள போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் பட்டியலின் அடிப்படையில் பஞ்சாப் அரசு இழப்பீடு வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல், ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ராகுல் காந்தியின் தீர்மானத்திற்கு ஒன்றிய அரசின் சார்பில் யாரும் பதிலளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, சிவசேனா ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  பேசியதாவது;

நவம்பர் 30ம் தேதி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தரப்பட்ட இழப்பீடு குறித்து கேள்வி எழுப்பினோம். தரவுகள் இல்லாததால் இழப்பீடு குறித்து கேள்வியே எழவில்லை என்று வேளாண் அமைச்சர் கூறிவிட்டார். போராட்டத்தில் பலியான 400 விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. அதில் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை அளித்தது.

இந்த தகவல்கள் அடங்கிய பட்டியலை அவைக்கு அளிக்கின்றேன். அரியானாவில் பலியான விவசாயிகளின் பட்டியலை அவைக்கு தாக்கல் செய்கிறேன். தவறு செய்துவிட்டதாக பிரதமரே ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பின்னரும் தரவுகள் இல்லை என்கிறீர்கள். அந்த விவரங்கள் என்னிடம் உள்ளன என குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: