400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை கோட்டை சுவர் இடிந்து விழுந்தது-அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு

தககலை : பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றியுள்ள பழமைவாய்ந்த  கோட்டைச் சுவர் இடிந்து விழுந்தது. இதை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார். வேணாட்டின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்த போது அரண்மனை உள்ளிட்ட 186 ஏக்கர்  பகுதியைச் சுற்றி கோட்டைச் சுவர் கட்டப்பட்டது. கி.பி.1601ம் ஆண்டில் மன்னர் வீர ரவிவர்ம குலசேகர பெருமாள் காலத்தின் போது முதன் முறையாக கோட்டைச் சுவர் கட்டப்பட்டது. அப்போது மண் கோட்டையாக கட்டப்பட்டது. 1744ல் நவீன திருவிதாங்கூரின் மன்னராக கருதப்படும் மார்த்தாண்ட வர்மா காலத்தின் போது கல்குளம் அரண்மனை மற்றும் கோட்டைச்சுவர் பத்மநாபபுரம் என அழைககப்பட்டது. கோட்டைச்சுவரும் மாற்றி கட்டப்பட்டது.

கோட்டையின் உயரம் 4.5 மீட்டர் முதல் 7.5 மீட்டர் வரை உள்ளது. சுமார் 4 கி.மீட்டர் நீளம் உடையது. கோட்டைச் சுவரில் வீரர்கள் நின்று கொண்டு எதிரிகளை கண்காணிக்கவும், துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட போர் கருவிகளை பயன்படுத்தும் வகையிலும் கோட்டைச் சுவரில் இடைவெளிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோட்டைச்சுவர் பராமரிப்பின்றி  காணப்பட்டது.

கேரள அரசின் நிர்வாகத்தில் உள்ள அரண்மனை முறையாக பராமரிக்கப்பட்டு வரும் வேளையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டைச் சுவர் பல ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படாமல் இருந்து வருவது பல்வேறு தரப்பினர் இடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோட்டைச்சுவர் ஆர்சி தெரு வாழவிளை செல்லும் பகுதியில் இடிந்து விழுந்தது. இந்நேரம் அப்பகுதியில் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

அந்த இடத்தை அமைச்சர்ர் மனோ தங்கராஜ் பார்வையிட்டு அங்கு செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலர்மேல் மங்கை, தாசில்தார் பாண்டிம்மாள்,  திமுக மேற்கு மாவட்ட பொருளாளர் மரிய சிசுகுமார், ெபாறியாளர் அணி அமைப்பாளர் வர்க்கீஸ், ஒன்றிய செயலாளர் அருளானந்தஜார்ஜ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பின்னர்  அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: நீண்டகாலமாக கோட்டைச்சுவர் பராமரிப்பில்லாமல் காணப்பட்ட நிலையில், இது தொடர்பாக கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில்  கேள்வி எழுப்பிய போது, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தெளிவுபடுத்தப்பட வில்லை. பொதுப்பணி துறையா அல்லது தொல்லியல் துறையா என குழப்பமான நிலையே காணப்பட்டது.

தற்போது இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கோட்டை சுவரை புனரமைத்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது நகர செயலாளர் மணி, அரசு வக்கீல் ஜெகதேவ் ஆகியோர் உடனிருந்தனர்.இந்த இடத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டார். அவருடன்  மாவட்ட நிர்வாகிகள் குமரி ரமேஷ், உண்ணிகிருஷ்ண் உள்பட பலர் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து காய்கறி செடிகள்

பத்மநாபபுரம் அரண்மனை அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தின் கீழ்  நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் மற்றும் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ்  கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தளைகள் மற்றும் விதைகள்  வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தின் கிராம மற்றும் நகர்ப் புறங்களில் வீட்டுத்தோட்டங்கள் மற்றும் மாடிப்பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைப்பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் 2021-22ம் ஆண்டுக்கான வேளாண் மற்றும் உழவர் நலத்துறை நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்டன. இத்திட்டங்களின் வாயிலாக பயனாளிகள் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும்  மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மாடித் தோட்டத் தளைகள் 500 எண்கள், காய்கறி விதைத் தளைகள் 2500 எண்கள் மற்றும் ஊட்டச்சத்து தளைகள் 4000 எண்கள் இலக்கு பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் நகரப்பகுதிகளில் ஆறு வகையான காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள்6, இரண்டு கிலோ அளவிலான தென்னை நார்கட்டிகள் 6, 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், 100மி.லி இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய மாடித்தோட்டதளைகள் மானியவிலையில் ரூ.225 க்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் htups://tnhorticulture.tn.gov.in/kit என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பித்து, சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மூலிகைகள் உட்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories:

More