கூடலூர் மூலவயலில் 2வது நாளாக அட்டகாசம் மூதாட்டி வீட்டை இடித்து அரிசி, உப்பை தின்ற அரிசி ராஜா யானை-மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவர்சோலை. இங்குள்ள பாடாந்துறை, 3வது டிவிஷன், வாச்சகொல்லி, செலுக்காடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அரிசி ராஜா உள்ளிட்ட 3 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன.இந்த காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்து நாசப்படுத்தி வருகின்றன. மேலும் வீட்டில் உள்ள அரிசி உள்ளிட்ட தானியங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 4ந்தேதி இரவு  மூலவயல் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி  வீட்டை இடித்து சேதப்படுத்தின.  காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே பகுதியில் கணவரை இழந்த மருதாயி (60) என்பவர் தனியே வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மருதாயி சாப்பிட்டுவிட்டு தூங்கச்சென்றார். நள்ளிரவு ஊருக்குள் புகுந்த காட்டு அரிசி ராஜா உள்ளிட்ட 3 யானைகள் மருதாயி வீட்டை இடித்து தள்ளியது. இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார்.

சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் எழுந்து அருகில் உள்ள அறையில் மறைந்து தப்பினார். வீட்டை இடித்து தள்ளிய காட்டுயானைகள் உள்ளிருந்த அரிசி, உப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை வெளியே இழுத்துபோட்டு தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின.யானைகள் ஊருக்குள் புகுந்திருப்பதை அறிந்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து வீடுகளை இடித்து அரிசியை தின்னும் அரிசி ராஜா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories:

More