ஜோலார்பேட்டை அருகே சாலையோர கிணற்றில் மண் சரிவால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே சாலையோரம் உள்ள கிணற்றில் மண் சரிவு ஏற்பட்டதால் சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி மாக்கனூர் பகுதியில் தனிநபருக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறானது பொது மக்கள் பயணிக்கும் சாலையோரத்திலும், கிணற்றின் மூன்று பக்கமும் குடியிருப்புகளும் உள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் தற்போது தொடர்ந்து பெய்த கனமழையால் இந்த பெரிய கிணறு முழுவதும் நிரம்பி கிணற்றின் பக்கச் சுவர்கள் சரிந்து விழுந்தது.

இதனால் கிணற்றின் அருகாமையில் குடியிருப்பில் வசிக்கும் மக்களில் சிலர் இந்த மண் சரிவால் கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பயணிக்கும் பிரதான கிராம சாலை ஓரத்தில் இந்த கிணறு உள்ளதால் சாலையோரத்தில் கட்டப்பட்டிருந்த கால்வாய் உடன் கிணற்றில் மண்சரிவு ஏற்பட்டது.

மேலும் சாலையோரத்தில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கழிவுநீர் கால்வாய் கிணற்றில் சரிந்து விழுந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோரத்தில் காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் புதைக்கப்பட்டுள்ளதால் கிணற்றில் மண் சரிவால் சாலையின் நடுவே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அவ்வழியாக வரும் பள்ளி வாகனங்கள் மாணவர்களை அழைத்து செல்ல முடியாமல் சிறிது தூரத்திற்கு முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட்டு மாணவர்கள் நடந்துசென்று பள்ளி வாகனத்தில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து கிணற்றின் உரிமையாளர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதனால் கிணற்றின் அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் சிலர் கடந்த ஒரு வாரமாக கிணற்றில் உள்ள நீரை மின்மோட்டார் மூலம் அப்புறப் படுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் குடியிருப்புகளின் நடுவே எந்தப் பயன்பாடின்றியும் ஆபத்தான நிலையில் உள்ள இந்த தனி நபரின் கிணற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிணற்றை மூடுவதற்கு  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: