காதலியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுப்பு கூலித்தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை-கடலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு

கடலூர் : இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கூலித்தொழிலாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா தெற்கிருப்பு கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (25). விவசாய கூலித்தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டன் இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார். இதனால் இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து இளம்பெண் மணிகண்டனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் மணிகண்டன் மறுத்துள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண் கடந்த 2015ம் ஆண்டு மே 20ம் தேதி சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை அழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மணிகண்டன் இளம்பெண்ணை குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்வதாக கூறி மாரியம்மன் கோயிலில் நிச்சயம் செய்துள்ளார்.இந்நிலையில் இளம்பெண்ணுக்கு கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

 இதையடுத்து இளம்பெண் மணிகண்டனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் மணிகண்டன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டன் மீது கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Related Stories: