தென் ஆப்ரிக்கா, அமெரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு ஓமிக்ரான் தொற்று... இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!!

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து மராட்டியம் மாநிலம் திரும்பிய 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ், வீரியமிக்கதாகவும், ஆபத்தானதாகவும் இருக்குமென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க ஒன்றிய அரசு, நாடு முழுவதும் சர்வதேச விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நோய் பரவிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த புதிய கட்டுப்பாடு கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து மராட்டியம் மாநிலம் திரும்பிய மேலும்  2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் இருந்து 37 வயதுள்ள ஆண் பயணி மும்பை திரும்பினார். அவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த இவரது 36 வயது நண்பருக்கும் ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால் இவர்கள் இருவருக்கும் நோய் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடன் தொடர்பில் இருந்த மிகவும் கவனிக்கப்பட வேண்டிய பட்டியலில் உள்ள 5 பேரையும் கவனிக்கப்பட வேண்டிய பட்டியலில் இல்லாத 315 பேரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி இருப்பதாக மராட்டிய மாநிலம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   இதன் மூலம் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.  நாட்டிலேயே அதிகபட்சமாக  மகாராஷ்டிராவில் 10 பேருக்கும், கர்நாடகாவில் 2 பேருக்கும், ஜெய்ப்பூரில் 9 பேருக்கும், டெல்லி , குஜராத்தில் ஒருவர் என 2 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Related Stories: