×

பாடம் கற்க வேண்டும்

ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. பல பெயர்களில் புதுப்புது வைரஸ்கள் உருவாகி வருகின்றன. அறிவியலின் உச்சத்தில் இருந்தும், கொரோனா வைரஸ் தானாக உருவாகியதா? அல்லது உருவாக்கப்பட்டதா? என்பது குறித்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமிக்ரானிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது அவசியம். முக்கியமாக, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம்.கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு ஒமிக்ரான் வைரஸை கவனத்துடன் கையாள வேண்டும். வல்லரசு நாடுகள் உள்பட பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், சில நாடுகள் தடுப்பூசி செலுத்துவதில் தன்னிறைவு பெற்றுள்ளது. ஆனால், வறுமையில் பின்தங்கியுள்ள பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது தான் வேதனைக்குரியது. முக்கியமாக, அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, ஒமிக்ரான் போன்ற வைரஸ்களிடம் இருந்து தப்பிக்க முடியும். எனவே, வறுமையில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு அதிகளவு தடுப்பூசிகளை வல்லரசு நாடுகள் வழங்க வேண்டும்.

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. எனவே மக்கள் கூடும் இடங்களில் கூடுதலாக முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை ஒன்றிய அரசு தீவிரப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் ‘‘நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’’ என்று ஒன்றிய அரசு கூறியது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் பல்லாயிரம் பேர் இறந்தனர். ஒமிக்ரான் வைரஸ் விஷயத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது.தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்றும், பலி எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அதிரடி நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக தமிழக அரசு எடுத்து வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

மக்கள் ஒத்துழைப்பு இருந்தால், ஒமிக்ரான் வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.ஒமிக்ரான் வைரஸ் குறித்து அறிவிப்பு, அறிவுரை கூறுவதோடு கடமை முடிந்து விட்டதாக ஒன்றிய அரசு நினைக்கிறது. ஒமிக்ரான் வைரஸ் விஷயத்தில் ஒன்றிய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது, பேரிடர் காலத்தில் தேங்கி கிடக்கும் வெள்ள நீரில் நடந்து சென்று மக்களின் குறைகளை கேட்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழக முதல்வர் மிகசிறப்பாக செயலாற்றி வருகிறார். இக்கட்டான தருணத்திலும், மக்களை காப்பதில் விறுவிறுப்பாக இயங்கி வரும் தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை பார்த்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

Tags : The lesson must be learned
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...