திருவல்லிக்கேணியில் பெண் இன்ஸ்பெக்டருக்கு வந்த மர்ம பார்சலால் வெடிகுண்டு பீதி : முந்திரி, சாக்லேட் இருந்ததால் போலீசார் நிம்மதி

சென்னை:திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டருக்கு மர்ம நபர் கொடுத்து சென்ற பார்சலால் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் அச்சமடைந்தனர். உடனே வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பார்சலை மைதானத்திற்கு கொண்டு சென்று பிரித்த போது, அதில் முந்திரி மற்றும் சாக்லேட் மட்டும் இருந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு ேநற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு அடையாளம் தெரியாத 52 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கையில் பார்சலுடன் வந்தார். காவல் நிலைய வரவேற்பு அறைக்கு வந்த அவர், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு பரிசு பொருள் கொடுக்க வந்ததாக கூறி அந்த பார்சலை வைத்துவிட்டு சென்றுவிட்டார். போலீசார், அந்த பார்சலை திறக்காமல் வைத்திருந்தனர்.

ரோந்து பணி முடிந்து இரவு 8.30 மணிக்கு காவல்நிலையம் வந்த பெண் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வியிடம் இதுபற்றி கூறி மர்ம நபர் கொண்டு வந்த பார்சலை காவலர்கள் கொடுத்தனர். அப்போது பெண் இன்ஸ்பெக்டர், ‘பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் வெடி குண்டாக இருக்குமோ’ என்ற அச்சத்தில் அந்த பார்சலை பிரிக்காமல் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கருக்கு தெரிவித்தார். உடனே அவர் வந்து பார்சலை பார்த்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததை உணர்ந்து, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தார்.

அந்த பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், மோப்ப நாய் ‘ராம்போ’ உடன் வந்து, மர்ம நபர் கொடுத்து சென்ற பார்சலை பாதுகாப்பு உடையணிந்து எடுத்துக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர் விடுதி அருகே உள்ள மைதானத்தில் வைத்து பிரித்து பார்த்தார். அப்போது அந்த பார்சலில் வெடிகுண்டு இல்லை. அதற்கு பதில் முதல் தரமான முந்திரி பருப்பு மற்றும் வெளிநாட்டு சாக்லேட் மட்டும் இருந்தது. அதை பார்த்து போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பார்சலில் வந்த முந்திரி பருப்பு மற்றும் சாக்லேட்டை பிரித்து சாப்பிட்டனர்.மேலும், சந்தேகத்திற்கு இடமான வகையில் பார்சல் கொடுத்து சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து, போலீசார் சிசிடிவி பதிவு மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: