ஓபிஎஸ், இபிஎஸ் காரில் செருப்பு, கற்களை வீசிய விவகாரம் தாக்குதல் நடத்தியவர்கள் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு: சிசிடிவி மூலம் அடையாளம் காணும் பணி தீவிரம்

சென்னை: ஜெயலலிதா 5ம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் காரை வழிமறித்து கற்கள், செருப்புகளை வீசி தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதனால் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது சிலர் நுழைவாயிலில் நின்று கற்கள் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு எற்பட்டது.

இதுகுறித்து அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மாறன் புகார் அளித்தார்.அதில்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தூண்டுதலின் பேரில், அமமுக பொறுப்பாளர்கள் மற்றும் அடியாட்கள் எம்.ஜி.ஆர்.நினைவிடத்திற்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் பயங்கர ஆயுதங்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரின் வாகனத்தை மறித்து முற்றுகையிட்டு, மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி, கற்களையும், காலணிகளையும், கட்டைகளையும், கம்புகளையும் கொலை வெறியோடு வீசினார்கள். எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.அதன் படி அண்ணாசதுக்கம் போலீசார் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது ஐபிசி 148, 294(பி), 323, 506(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் வகையில் சிசிடிவி பதிவுகளை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: