அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு: கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாரும் போட்டியிடாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சி தலைமை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு கடந்த 4ம் தேதி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 4ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு சிலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான காரணத்தை கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.இந்த சூழ்நிலையில், வேட்புமனு வாபஸ் பெற நேற்று மாலை 4 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே வேட்புமனுக்கள் செய்துள்ளதால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிமுக அமைப்பு செயலாளரும், தேர்தல் ஆணையருமான பொன்னையன் நேற்று மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் அளித்த பேட்டியில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமியும் ஒரே ஒரு மனு மட்டுமே தாக்கல் செய்துள்ளதாலும், அவர்களுடைய மனு அதிமுக சட்டதிட்ட விதிப்படி சரியாக உள்ளதாலும் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது” என்றார்.

இதையடுத்து இருவருக்கும் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினர். அப்போது, கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், நடனம் ஆடியும்  தொண்டர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் இருவரும் அடுத்த 5 ஆண்டுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள். இதைதொடர்ந்து இருவரும் நிர்வாகிகளுடன் சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினர்.

Related Stories: