கொரோனா வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவத்தில் பெரிய தீர்வு: எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன் தகவல்

சென்னை: கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் ஒரு பெரிய தீர்வு காணப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்..சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறை சார்பில் சித்த மருத்துவ ஆசிரியர்களுக்கான மருத்துவத் தொடர் கல்வி கலந்தாய்வுக் கூட்டம் நேற்று தொடங்கியது. ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சக நிதியுதவியுடன் வரும் 11ம் தேதி வரை 6 நாட்களுக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தலைப்புகள், மருத்துவ ஆய்வுக்கான திட்ட அறிக்கை தயாரித்தல், புள்ளியியல் பகுப்பாய்வு, ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்தியா முழுவதும் இருந்து 12 நிபுணர்கள் பங்கேற்று அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து அரசு சித்த மருத்துவ ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

சித்த மருத்துவத் துறை  கையேட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் வெளியிட, ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ் பெற்றுக் கொண்டார்.பின்னர், துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது: சித்தர்களின் மருத்துவம், விஞ்ஞான வழியாக வருவதற்கு முன்னரே பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும், சித்த மருத்துவத்தை அணுகும் முறை மக்களிடையே குறைவாகவே உள்ளது. அகத்தியர், திருமூலர், தேரையார் போன்ற சித்தர்கள் எல்லாம் மருத்துவம் குறித்து வழிமுறைகளை அறிய கேள்விகள் கேட்டு விஞ்ஞானத்தின் முன்பாகவே தங்களது அறிவின் மூலம் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் நோய்கள் கண்டுபிடிப்பதற்கான எல்லா மருத்துவத்தின் அணுகுமுறையும் ஒன்றாகவே உள்ளது. பொதுவாக மருத்துவத்தில் நாம் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நாக்கு, மொழி, நிறம், விழி, ஸ்பரிசம், நீர், நாடி, மலம் போன்ற எண் வகை விஷயங்களை கேட்டறிந்து அதற்கான சிகிச்சையை அளிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கிராமங்களில் சித்த வைத்தியர்கள் மூலம் சிறப்பான அணுகுமுறையில், நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் ஒரு பெரிய தீர்வு காணப்பட்டு வருகிறது. எனவே உலகெங்கும் புகழ் பெற்றுவரும் சித்த மருத்துவத்தை இந்த வேளையில் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். மலேசியா போன்ற வெளிநாடுகளில் சித்த முறைக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: