தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சிகளில் லாரிகள் மூலம் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை: நகராட்சி நிர்வாக இயக்குனர் தகவல்

சென்னை: தாம்பரம்,   பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும்,   பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை   ஆகிய பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டு புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாநகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய   பணிகள் குறித்து, நகராட்சி நிர்வாக  இயக்குனர் பொன்னையா, சிட்லபாக்கம்,   மாடம்பாக்கம், தாம்பரம் பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், பொறியாளர் ஆனந்த ஜோதி, சுகாதார அலுவலர் அறிவுச்  செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது,   தாம்பரத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு   மேற்கொண்ட அவர், விடுபட்ட பாதாள சாக்கடை  பணிகளை விரைவாக முடித்து   மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:தாம்பரம்   மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பேரூராட்சி பகுதிகளில் குப்பையை அகற்றும் பணியை தீவிரப்படுத்த 15வது நிதிக்குழு மானிய நிதியில் புதிய லாரிகள், பேட்டரி வாகனங்கள்   வாங்கி, அதன்மூலம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தாம்பரத்தில்   பாதாள சாக்கடை திட்ட பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில்,   விடுபட்ட சில இடங்களில் பணிகளை, ஒன்றரை மாதத்தில்   முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு   வருகிறது.தாம்பரம் மாநகராட்சி யுடன் புதிதாக இணைக்கப்பட்ட பேரூராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை   திட்ட பணிகள் நிறைவடைய சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதால்,   முதல் கட்டமாக இந்த பகுதிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தில், லாரிகள்   மூலம் கழிவு நீரை அகற்றி, தாம்பரம் கழிவுநீர்   சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.   இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

More