மக்கள் குறைதீர் கூட்டத்தில் 5.84 லட்சத்தில் நலத்திட்ட உதவி

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், 17 பயனாளிகளுக்கு 5.84 லட்சத்தில் நலதிட்ட உதவிகளை கலெக்டர் விஜயா ராணி வழங்கினார்.பொதுமக்களின் குறைகளை களையவும், கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம், வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து  மனுக்கனை கலெக்டர் விஜயா ராணி பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில், மொத்தம் 95 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் அவர் உத்தரவிட்டார். மேலும் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சாலை விபத்து நிவாரண நிதியுதவி, விதவை உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை என மொத்தம் 17 பயனாளிகளுக்கு 5,84,000 மதிப்புள்ள நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

கூட்டத்தில், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜகோபாலன்,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.சூரியகலா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பி.டி.சுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில்  உடல் வெப்பநிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும், மனு அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றியும் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற பொதுமக்களுக்கு கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Related Stories: