டெல்லியில் இந்தியா- ரஷ்யா உச்சி மாநாடு மோடி - புடின் பேச்சுவார்த்தை

* ராணுவம், விண்வெளி, எரிசக்தி துறையில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து * 6 லட்சம் ஏ.கே. 203 துப்பாக்கி கூட்டாக தயாரிக்க திட்டம்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த இந்தியா, ரஷ்யா இடையேயான 21வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்து, இருதரப்பு உறவுகள், தடுப்பூசி தயாரிப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாநாட்டின் இடையே ராணுவம், விண்வெளி, எரிசக்தி துறையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவிடமிருந்து 6 லட்சம் ஏ.கே-203 துப்பாக்கிகளை வாங்கவும், அவற்றை இரு நாடுகளும் கூட்டாக இந்தியாவில் உற்பத்தி செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்தியா, ரஷ்யா இடையே ஆண்டுதோறும் நடைபெறும் 21வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒருநாள் பயணமாக இந்தியா வந்தார். டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - புடின் சந்திப்பு நேற்று மாலை நடந்தது.

இதில், இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய ராணுவ ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வேண்டுமென மோடி வலியுறுத்தியதை புடின் ஏற்றுக் கொண்டார். தடுப்பூசி தயாரிப்பது, ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். மேலும், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகான சூழல், சர்வதேச தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.கொரோனா பரவலுக்கு பிறகு புடின் மேற்கொள்ளும் 2வது வெளிநாட்டுப் பயணம் இது. இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் அவர் ஜெனிவாவில் ரஷ்யா அதிபர் புடினை சந்தித்து பேசினார். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘உங்கள் பயணத்தின் மூலம் இந்தியா மீது கொண்டுள்ள அன்பு தெளிவாகத் தெரிகிறது. இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. கொரோனா சவால்கள் இருந்தபோதிலும், இருதரப்பு உறவின் வளர்ச்சி வேகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக உலகம் பல அடிப்படை மாற்றங்களை கண்டு வருகிறது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் இந்தியா, ரஷ்யா இடையேயான நட்பு நிலையானதாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியா, ரஷ்யா இடையேயான உறவு உண்மையானது, தனித்துவமானது, இருதரப்பு நலன்களை நோக்கமாக கொண்டது’’ என்றார்.

புடின் பேசுகையில், ‘‘நாங்கள் இந்தியாவை பெரிய சக்தியாகவும், நட்பு நாடாகவும், நம்பகமான நீண்ட கால நண்பராகவும் கருதுகிறோம். நமது நாடுகளுக்கிடையேயான உறவுகள் வளர்ந்து வருகின்றன. இந்தியாவில் நாங்கள் மேலும் அதிக முதலீடுகளை செய்ய உள்ளோம். வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ராணுவ தொழில்நுட்ப துறையில் நாங்கள் பெரிதும் ஒத்துழைக்கிறோம். நாங்கள் இரு நாடுகளும் இணைந்து உயர் தொழில்நுட்பங்களை உருவாக்கி இந்தியாவில் உற்பத்தி செய்கிறோம்’’ என்றார். முன்னதாக, இந்தியா, ரஷ்யா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை கூட்டாக சந்தித்து பேசினார். 6 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்வது, உள்ளிட்ட விண்வெளி, எரிசக்தி துறை, ராணுவம் ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரவு விருந்துடன் புடின் நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

சீன அத்துமீறல் குறித்து புகார்

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு உடனான சந்திப்பின் போது அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து குற்றம்சாட்டினார். ‘‘இந்தியாவின் வடக்கு எல்லையில் எந்தவித காரணமும் இல்லாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்டை நாடு, எல்லையில் படைகளை பெருமளவில் குவித்து, ராணுவ தளவாடங்களை எல்லை முகாம்களில் குவித்து வருகிறது. ஆனால் இத்தகைய தூண்டுதல்கள் இருந்த போதிலும் இந்திய அரசும் இந்திய மக்களும் அதனை எதிர்கொண்டு வருகின்றனர்’’ என சீனாவின் பெயரை குறிப்பிடாமல் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

₹5,200 கோடியில் துப்பாக்கி உற்பத்தி

* ரஷ்யாவிடம் இருந்து வாங்க உள்ள ஏகே.203 ரக துப்பாக்கி வாயு மூலம் இயங்கக் கூடியது.

* இதில் துப்பாக்கி தோட்டாக்களில் இருப்பதை விட வெடி மரு்ந்து அதிகமாக இருக்கும்.

* இதன் மூலம் ₹5,200 கோடியில் ரஷ்யாவிடம் இருந்து 6 லட்சத்துக்கும் அதிகமான ஏகே. 203 ரக தானியங்கி துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.

* ஏகே. 203 ரக துப்பாக்கியை வாங்குவதன் மூலம், இந்திய ராணுவத்தில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கும் இன்சாஸ் ரைபிள்ஸ் என்று அழைக்கப்படும் இந்திய சிறு ஆயுதங்கள் தொகுப்பு விடைபெறுகிறது.

Related Stories: