பூந்தமல்லி, மாங்காடு பகுதிகளில் கனரக வாகனங்களில் பேட்டரிகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

பூந்தமல்லி: கனரக வாகனங்களில் பேட்டரிகளை திருடும் மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். பூந்தமல்லி மற்றும் மாங்காடு பகுதிகளில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கனரக வாகனங்களில் உள்ள பேட்டரிகளை சமீப காலமாக இரவு நேரங்களில் மர்ம கும்பல்  திருடி சென்று விடுகிறது.  ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளிலும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் 3 பேர் கொண்ட கும்பல் வாகனங்களை நோட்டமிட்டு சர்வ சாதாரணமாக வாகனங்களில் உள்ள பேட்டரிகளை திருடி சென்று வருகின்றனர்.

குறிப்பாக, பூந்தமல்லி மற்றும் மாங்காடு பகுதிகளில் கடந்த சில தினங்களில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து பேட்டரிகள் திருடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வீட்டிற்கு வெளியே மற்றும் பஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களையும் மர்ம நபர்கள் குறிவைத்து, திருடுகின்றனர். இந்த பகுதிகளில் அதிக அளவில்  கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும், அவை  பல இடங்களில்  செயல்படாமல் இருப்பதால் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கனரக வாகனங்களில் இருந்து மர்ம நபர்கள்  பேட்டரிகளை திருடிச்செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை இயங்க வைக்கவும், திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More