அடுத்தடுத்த விபத்தால் பரிதாபம் ஷேர் ஆட்டோக்கள் கவிழ்ந்து ஓட்டுனர் பரிதாப பலி

திருவள்ளூர்: அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்டோ கவிழ்ந்ததால் ஓட்டுனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சந்தவேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(29). சொந்தமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், ராஜ்குமார் நேற்று முன்தினம் பயணிகளை ஏற்றிக்கொண்டு கண்ணூர் கிராமத்திற்கு சென்றார். பிறகு பயணிகளை இறக்கி விட்டு சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பண்ணூர் கிராமத்தில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது நெடுஞ்சாலையில் மாடு குறுக்கே வந்தது. அப்போது மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பியுள்ளார். இதனால் ஆட்டோ நிலை தடுமாறி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராஜேஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பின்னால் வந்த மற்றொரு ஆட்டோ மூலம் படுகாயமடைந்த ராஜ்குமாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சோகன்டி கிராமம் அருகே சென்றபோது நிலை தடுமாறி நெடுஞ்சாலையோரம் ஏரியில் அந்த ஆட்டோவும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக ராஜ்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சந்தவேலுார் கிராமத்தில் உள்ள அரசு முதலுதவி மையத்தில் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் பலியானார். இதுகுறித்து மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

More