ஆசிரியர்களை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

பள்ளிப்பட்டு: அரசு பள்ளி ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்படுவாக கூறி ஆசிரியர்களை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே சமீப காலமாக அடிக்கடி மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், மாணவிகளை, மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வதும் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வதும் தொடர் கதையாகி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் மாணவர்களின் பெற்றோர் பலமுறை புகார் செய்துள்ளனர். இருப்பினும், ஆசிரியர்கள் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் என 200க்கும் மேற்பட்டோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மாணவர்களின் பெற்றோருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories: