திருச்சானூரில் 7ம் நாள் பிரமோற்சவம் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்: இன்று சர்வ பூபால வாகனம்

திருமலை: திருச்சானூரில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று, சூரிய பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் காட்சி அளித்தார். தொடர்ந்து இன்று காலை சர்வ பூபால வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து சின்ன சேஷம், பெரிய சேஷம், அன்னம், முத்துபந்தல், சிங்கம், கற்பக விருட்சம், அனுமந்தம், கஜ வாகனம், சர்வ பூபாலம், கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில், வேணுகோபால கிருஷ்ணராக எழுந்தருளி பத்மாவதி தாயார் அருள்பாலித்தார்.

இதில் ஜீயர்கள் தலைமையில் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடினர். பின்னர் பக்தர்கள் இணைந்து 100 டஜன் கண்ணாடி வளையல்கள் மற்றும் உண்டியலுக்கான துணியை நன்கொடையாக வழங்கினார்கள். இரவு சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று காலை சர்வ பூபால வாகனத்தில் கோயிலுக்குள் பத்மாவதி தாயார் எழுந்தருள உள்ளார். இரவு குதிரை வாகனத்திலும் எழுந்தருள உள்ளார். நாளை பஞ்சமி தீர்த்தம் மற்றும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இரவு கொடி இறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது. 9ம் தேதி(நாளை மறுதினம்) பிரமோற்சவத்தின்போது தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட தோஷங்களுக்கு பரிகாரமாக புஷ்பயாகம் நடைபெற உள்ளது.

* சுப்ரபாத சேவை ரத்து

வைணவ  திருத்தலங்களில் மார்கழி மாதம் 1ம் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாசுரம் பாடியபடி சுவாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதம் 16ம் தேதி மதியம் 12.26 மணிக்கு தொடங்குவதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 17ம் தேதி முதல் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் எழுதிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சுவாமியை துயில் எழுப்பப்படவுள்ளது. மார்கழி மாதம் நிறைவுபெறும் வரை திருப்பாவை சேவை நடைபெறவுள்ளது. மீண்டும் வழக்கம்போல் ஜனவரி 15 ஆம் தேதி முதல் சுப்ரபாத சேவையுடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி துயில் எழுப்பப்பட உள்ளது.

Related Stories: