ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டம் குறித்து மகாராஷ்டிரா அரசு விவாதிக்க அவசியமே கிடையாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட பந்தயங்களுக்கு தடை விதித்திருந்தது.  இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நிரந்தர சட்டத்தை மாநில அரசு உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் மும்பை உயர்நீதிமன்றம் மகாராஷ்டிராவில் ரேக்ளா விளையாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே மற்றும் குமணன் ஆகியோர் வாதத்தில், ‘மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை ஒப்பிட முடியாது. அதனை நடத்த சிறப்பு சட்டம் அரசால் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். ’ என தெரிவித்தனர்.

இதே போன்று கம்பளா பந்தயம் நடத்த, கர்நாடக அரசு சிறப்பு சட்டம் இயற்றியுள்ளதாக அம்மாநில வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் சிறப்பு சட்டம் குறித்து மகாராஷ்டிரா ஏன் விவாதிக்க வேண்டும். இந்த வழக்கில் மகாராஷ்டிரா மாநில அரசு, பீட்டா உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தில் வைக்க உள்ள வாதங்களை குறிப்பாக தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை டிச.15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: