372 ரன் வித்தியாசத்தில் நியூசி. படுதோல்வி தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை: சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14வது தொடர் வெற்றி

மும்பை: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா 372 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும், சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக 14வது டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. அடுத்து கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. மும்பை, வாங்கடே மைதானத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கிய 2வது டெஸ்டில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 325 ரன் குவித்தது.  

அடுத்து களமிறங்கிய நியூசி. சிராஜ் மற்றும் அஷ்வின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 62 ரன்னுக்கு சுருண்டது. 263 ரன் முன்னிலையுடன் பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 70 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. மயாங்க் 62, புஜாரா, ஷூப்மன் தலா 47, அக்சர் 41*, கோஹ்லி 36 ரன் எடுத்தனர். நியூசி. தரப்பில்  அஜாஸ் 4, ரச்சின் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 540 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசி. 3வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்திருந்தது. டேரில் 60 ரன் விளாசி ஆட்டமிழந்தார். நிகோல்ஸ் 36, ரச்சின் 2 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ரச்சின் 18,  ஜேமிசன் 0, டிம் சவுத்தீ 0, சோமர்வில் 1 ரன் எடுத்து ஜெயந்த் யாதவ் சுழலில் அணிவகுக்க, நிகோல்ஸ் 44 ரன் (111 பந்து, 8 பவுண்டரி) விளாசி அஷ்வின் சுழலில் சாஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். நியூசி 56.3 ஓவரில் 167 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்தது. அந்த அணி கடைசி 5 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 372 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சொந்த மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக 14வது டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 4,  ஜெயந்த் யாதவ் 4, அக்சர் 1 விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக  மயாங்க் அகர்வால், தொடர் நாயகனாக  அஷ்வின் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வெற்றியுடன் இந்தியா ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.

இந்தியாவின் இமாலய வெற்றி...

* மும்பை டெஸ்டில் 372 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிதான், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். முன்னதாக 2015ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 337 ரன்  வித்தியாசத்திலும் (டெல்லி), 2016ல் நியூசிலாந்துக்கு எதிராக 321 ரன் வித்தியாத்திலும் (இந்தூர்), 2008ல் ஆஸ்திரலேியாவுக்கு எதிராக 299 ரன் வித்தியாசத்திலும் (மொகாலி) இந்தியா வென்றுள்ளது.

* இது நியூசிலாந்தின் மிகப்பெரிய தோல்வியாகவும் அமைந்தது. முன்னதாக 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 358 ரன், 2016ல் இந்தியாவுக்கு எதிராக  321 ரன், 2001ல் பாகிஸ்தானுக்கு எதிராக 299 ரன் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.

* தொடர் நாயகன் விருது பெற்ற அஷ்வின் முதல் டெஸ்ட்டில் 6 விக்கெட் (3+3), 2வது டெஸ்ட்டில் 7 விக்கெட் (3+4) என மொத்தம் 13 விக்கெட் வீழ்த்தியதுடன் கணிசமாக ரன் குவித்து ஆல் ரவுண்டராக அசத்தினார்.

* முதல் டெஸ்டில் வாசிம் அக்ரம் (414 விக்கெட், பாக்.), ஹர்பஜன் சிங் (417 விக்கெட், இந்தியா), ஷான் பொல்லாக் (421, தெ.ஆப்.) சாதனைகளை முறியடித்த அஷ்வின், இதுவரை 81 டெஸ்டில் 427 விக்கெட் வீழ்த்தி உலக அளவில் 14வது இடத்தில் உள்ளார். சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் என்ற மைல் கல்ல எட்டிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. கும்ப்ளே (350) முதலிடத்தில் உள்ளார்.

* இந்த டெஸ்டில் விக்கெட் வீழ்த்திய நியூசி. பவுலர்கள் இருவரும் இந்தியர்கள்தான்! அஜாஸ் படேல் (14), ரச்சின் ரவிந்திரா (3) இருவரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

* நியூசிலாந்து தொடர்ந்து 12வது முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

Related Stories: