நாகலாந்தில் 2 முறை துப்பாக்கி சூடு நடத்திய ராணுவம் 14 பொதுமக்கள் சுட்டு கொல்லப்பட்டது எப்படி? நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம்; அதிருப்தி தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: நாகலாந்தில் தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தால் 14 பொதுமக்கள் பலியானது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்திற்கு அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் வெளிநடப்பு செய்தன. நாகலாந்தின் மோன் மாவட்டம் ஓடிங் கிராமத்தின் அருகே தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 14 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். நாடாளுமன்றத்திலும் இவ்விவகாரம் நேற்று எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டுமென திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து மாலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகலாந்து விவகாரம் தொடர்பாக மக்களவையில் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: நாகாலாந்தின் மோன் மாவட்டம் அருகே தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ராணுவத்தின் 21வது பாரா கமாண்டோ படையினர் அங்கு விரைந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தச் சொல்லி உள்ளனர். ஆனால் வாகனம் நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளது. இதில் சந்தேகம் அடைந்த வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில், வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் பலியாகி உள்ளனர். அதன்பிறகுதான் தவறு நடந்திருப்பதை வீரர்கள் உணர்ந்துள்ளனர். துப்பாக்கி சூடு தகவலறிந்த கிராமமக்கள் ராணுவத்தினரை சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கி உள்ளனர்.

இந்த வன்முறையில் வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பல வீரர்கள் காயமடைந்தனர். எனவே தற்காப்புக்காகவும், கூட்டத்தை கலைக்கவும் வீரர்கள் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 7 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஒரு கும்பல், மோன் மாவட்டத்தில் உள்ள அசாம் ரைபிள்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு மையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இது போன்ற தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது எதிர்காலத்தில் எந்த தவறும் நடக்காமல் இருப்பதை அனைத்து நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அரசு வருத்தம் தெரிவிக்கிறது. பலியான 14 பேரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் சார்பிலும் உயர்மட்ட விசாரணை நடக்கிறது. ஒரு மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமித்ஷா கூறினார். இந்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து, காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

* துணை ராணுவம் மீது வழக்கு பதிவு

டெல்லியில் இருந்து திரும்பிய நாகலாந்து முதல்வர் நெபியு ரியோ நேற்று பலியான 14 பொதுமக்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மோன் மாவட்டத்தில் பலியானவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இறுதி சடங்கில் கலந்து கொண்டார். ராணுவ வீரர் உட்பட பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கும் நாகலாந்து அரசு ரூ.5 லட்சமும், ஒன்றிய அரசு ரூ.11 லட்சமும் இழப்பீடு நிதி வழங்குவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக திஜித் காவல் நிலைய போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், ராணுவத்தின் 21வது பாரா சிறப்பு படை மீது கொலை, கொலை முயற்சி, பொதுமக்களை கொல்லும் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராணுவமும் நீதிமன்ற விசாரணையை தொடங்கி உள்ளது. நாகாலாந்து விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும்  ஒத்திவைக்கப்பட்டது.

* காங்கிரஸ் தலைமையில் குழு

நாகாலாந்து விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். இதில் மூத்த தலைவர் ஜிதேந்திர சிங், அஜோய் குமார், கவுரவ் காகோய், அன்டோ அந்தோணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஒருவாரத்தில் நாகாலாந்துவிவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

Related Stories: