சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நகராட்சி பொறியாளர் வீட்டில் ரூ.23 லட்சம், 179 சவரன் சிக்கியது: ராணிப்பேட்டையில் விஜிலென்ஸ் ரெய்டு

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(43). இவர் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பு திருவண்ணாமலை நகராட்சி மற்றும் வேலூர் மாநகராட்சியில் மண்டல உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் ராணிப்பேட்டை நகராட்சிக்கு மாறுதலாகி வந்து நகராட்சி பொறியாளராக பணியாற்ற தொடங்கினார். இவர் மீது ஏற்கனவே, வேலூரில் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக செல்வகுமாரின் நடவடிக்கைகளை விஜிலென்ஸ் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் செல்வகுமார் பல்வேறு பணிகளுக்காக ராணிப்பேட்டை நகராட்சியில் லஞ்சம் வாங்குவதாக விஜிலென்ஸ் போலீசுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 9 மணியளவில் பொறியாளர் செல்வகுமாரின் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். தொடர்ந்து வீடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு 9 மணி வரை தொடர்ந்து 12 மணிநேரம் இந்த ரெய்டு நீடித்தது. இதில் ரூ.23 லட்சத்து 32 ஆயிரத்து 770, ரூ.10 லட்சத்து 73 ஆயிரத்து 520 மதிப்பிலான வங்கி காசோலை மற்றும் 179 சவரன் தங்க நகைகள், சுமார் 2 கிலோ வெள்ளி பொருட்கள் சிக்கியது. அவரிடம் துருவி துருவி விசாரிக்கின்றனர்.  தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: