கடன் தொல்லையால் தஞ்சையில் சோகம் மகனை கொன்று தம்பதி தூக்கிட்டு தற்கொலை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜா(38). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி கனக துர்கா(33). இவர்களது ஒரே மகன் ஸ்ரீவத்சன்(11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ராஜாவுக்கு, கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பல பேரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். ஆனால் சொன்ன தேதியில் ராஜாவால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். இந்த நெருக்கடியால் கடந்த ஒரு மாதமாகவே தம்பதியினர் மன உளைச்சலில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் ராஜா வீடு திறக்கப்படவில்லை. வீட்டுக்கு வெளியேயும் யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். இதில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதில் சந்தேகம் அடைந்த அவர்கள், இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் தம்பதியினர் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தும், அதன் அருகில் சோபாவில் சிறுவன் ஸ்ரீவத்ஷன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது,கடந்த 5ம்தேதி இரவு தற்கொலைக்கு முன் தம்பி வினோத்தின் செல்போனுக்கு ராஜா ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், எனக்கு கடன் தொல்லை அதிகமாகி விட்டது. பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வேற வழியில்லாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்யப்போவதாக பேசியுள்ளார். கடன் தொல்லையை சமாளிப்பதற்காக தான் குடியிருந்த வீட்டை ராஜா விற்றுள்ளார். ஆனால் வீட்டை விற்ற பணமும் உடனடியாக கிடைக்கவில்லை. கடன் தொல்லையால் முதலில் மகன் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories: