×

ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்ப மகாராஷ்டிரா அரசுக்கு அதிகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

புதுடெல்லி: தமிழகத்தில் சிறப்பு சட்டத்தின் மூலம் நடந்து வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து கேள்வி எழுப்ப மகாராஷ்டிரா அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட பந்தயங்களுக்கு தடை விதித்தது. இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டதன் விளைவாக ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், எருது விரட்டு, மாடு வடம் பிடித்தல் ஆகியவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நிரந்தர சட்டத்தை மாநில அரசு உருவாக்கியுள்ளது. இது இளைஞர்களின் போராட்டத்தால் சாத்தியமானது. இதையடுத்து தற்போது தமிழகத்தை முன்னுதாரணமாக வைத்து மகாராஷ்டிராவிலும் ரேக்ளா விளையாட்டுக்கான போராட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், மகாராஷ்டிராவில் ரேக்ளா விளையாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த விவகாரம் தொடர்பான மனுவின் நகலை தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்குங்கள்.

அவர்கள் அதனை பரிசீலனை செய்து பதிலளிக்கட்டும்’ என்று கடந்த 29ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன், சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு ஆகிவையோடு கலந்த பாரம்பரிய விளையாட்டு. மக்களோடு ஒன்றி போனது. இது மாநிலங்களின் பட்டியலில் வருவதால், அதனை நடத்த சிறப்பு சட்டம் அரசால் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஜல்லிக்கட்டு விளையாட்டில் எந்த விலங்குகளும் துன்புறுத்தப்படுவதில்லை. உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியே நடத்தப்படுகிறது. விதி மீறல்களும் கிடையாது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளுக்கு உரிய உணவு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, சரியான உடல் தகுதி இருந்தால்தான் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. அதே போன்று காளைகளை அடக்க போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கும் உரிய உடல், மருத்துவ தகுதிக்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால் மகாராஷ்டிராவின் ரேக்ளா பந்தயத்தை எந்த விதத்திலும் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டோடு ஒப்பிட முடியாது. இரண்டும் வெவ்வேறானது. வேண்டுமானால் மகாராஷ்டிராவில் ரேக்ளா பந்தயத்துக்கு உரிய சட்ட விதிகளை பின்பற்றி, அவர்கள் சிறப்பு சட்டம் இயற்றி கொள்ளலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக நேரடியாக மகாராஷ்டிரா அரசுக்கு எந்த உத்தரவை வேண்டுமானாலும் சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கலாம். இதில் குறிப்பாக தமிழக அரசு பெற்றுள்ள சிறப்பு சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா, வடமாடு உள்ளிட்டவையும் அடங்கும். எனவே ஜல்லிக்கட்டு சட்டத்தை வைத்து கொண்டு எருது விடுதல், மஞ்சு விரட்டு உள்ளிட்ட இணை விளையாட்டுகளை எப்படி நடத்த முடியும் என்று மகாராஷ்டிரா கேள்வி எழுப்ப இந்த விவகாரத்தில் கண்டிப்பாக இடமே கிடையாது. அதற்கான அதிகாரமும் இல்லை. ஏனெனில் தமிழ்நாடு 2017ம் ஆண்டில் பெற்றுள்ள சிறப்பு சட்டத்தில் அனைத்து விளையாட்டுகளும் உள்ளடங்கியவையாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Maharashtra Government ,Jallikatta ,TN Government ,Suprem Court , Maharashtra govt has no power to question Jallikattu: Tamil Nadu govt files reply to Supreme Court
× RELATED ஒன்றிய அரசின் பல்லாயிரம் கோடி ஒப்பந்தம் பெற்ற மேகா நிறுவனம்