பழநியில் துவங்கியது ஐயப்ப பக்தர்கள் சீசன்: கண்காணிப்பு பணியில் 50 போலீசார்

பழநி: பழநியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கியதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணிக்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தொடர்ந்து அரையாண்டு விடுமுறை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என மே மாதம் வரை பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

பக்தர்களின் வருகை அதிகரிப்பின் காரணமாக அடிவார பகுதியில் 500க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தள்ளுவண்டின், கை வியாரிகள், நடைபாதை வியாபாரிகள் என அடிவார பகுதி முழுவதும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில வியாபாரிகளால் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பக்தர்களிடம் பிக்பாக்கெட் செய்வது, வாகனங்களில் உள்ள பொருட்களை திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன்படி திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன், பழநி டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோரது ஆலோசனையின்படி 50க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, அடிவார பகுதியில் கிரிவீதி, சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலா வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மப்டி போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடிவார பகுதி முழுவதும் கண்காணிப்பு காமிரா மற்றும் சுழல் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்க 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் ஏமாறுவதை தடுக்கும் வகையில் தகவல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஆயுதப்படை போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினர்.

Related Stories:

More