சுரண்டை இலந்தைகுளம் நிரம்பியது; குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது: பொதுமக்கள் முகாமில் தங்க வைப்பு

சுரண்டை: சுரண்டையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக  இரட்டை குளம் நிரம்பி செண்பக கால்வாய் வழியாக இலந்தைகுளத்திற்கு தண்ணீர் வந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் பெய்த தொடர் மழை காரணமாக இலந்தைகுளம் நேற்றிரவு நிரம்பியது. இலந்தைகுளத்தின் கிழக்குப் பகுதி வழியாக வெளியேறிய தண்ணீர் குறவர்கள் குடியிருப்புக்குள் தண்ணீர் சூழ்ந்தது. தகவலறிந்த வீ.கே.புதூர் தாசில்தார் பட்டமுத்து, சுரண்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் உத்தரவின்பேரில் சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் சுரண்டை காவல்துறை அதிகாரிகள், சுரண்டை நகர திமுக செயலாளர் ஜெயபாலன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இணைந்து தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்த குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு மற்றும் தேவைகளை பழனி நாடார் எம்எல்ஏ சார்பில் வழங்கப்பட்டன. சுரண்டை நகர திமுக செயலாளர் ஜெயபாலன், போர்வை, பாய், தலையணை போன்றவற்றை வழங்கினார். ஏற்கனவே சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் தனியார் திருமண மண்டபத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. சுரண்டை கோட்டைத் தெரு தரைப்பாலத்திற்க்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து கடந்த நான்கு நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குலையநேரி பெரியகுளம் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீர் குலையநேரி வடக்கு தெரு முழுவதும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குலையநேரி ஊராட்சி சார்பில் போர்க்கால அடிப்படையில் தெரு முழுவதும் சரள்மண் அடித்து சமப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே சுரண்டை பகுதியில்  தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜ் ஆய்வு செய்து மீட்பு பணியை துரிதப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: