பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்குவதை ஏற்க முடியாது: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேட்டி

திண்டுக்கல்: ‘பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குவதை ஏற்க முடியாது’ என்று திண்டுக்கல்லில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறினார். திண்டுக்கல்லில் இந்திய மாணவர் சங்க மாநில சிறப்பு மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பாலபாரதி கூறியதாவது: தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார்களை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மூடி மறைக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கேட்கும்போது, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்குவதை ஏற்க முடியாது. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு நீதிமன்றத்திற்கு மாணவிகளின் பெற்றோர் செல்கின்றனர். திண்டுக்கல் நர்சிங் கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு மகிளா நீதிமன்றம் 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கியுள்ளது.

மாணவிகள், பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மற்றொரு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு மகிளா நீதிமன்றம் ஜாமீன் வழங்கக்கூடாது. குற்றவாளிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பு வழங்க கூடாது  என்றார். முன்னதாக மாநாட்டையொட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 150க்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர்.

Related Stories: