பெங்களூருவில் 90 ஆண்டுகள் பழமையான தமிழ் பள்ளியை மூட முடிவு, போதிய அளவு மாணவர்கள் இல்லாததே இதற்கு காரணம் :

பெங்களூர் :பெங்களூர் மாநகரில் தலைமை செயலக கட்டிடமான விதான சவுதாவில்  இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அசோக் நகர். அண்மையில் பெங்களூருவில் பெய்த கனமழையை  அடுத்து இப்பள்ளியை இழுத்து மூடிய கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் பயின்று வந்த மாணவர்களை தற்காலிகமாக அருகில் இருக்கும் வேறு பள்ளியில் அமரவைத்து பாடம் எடுத்து வருகின்றனர்.  தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான இங்கு 1930 ஆம் ஆண்டு தமிழ் ஆரம்ப பள்ளி தொடங்கப்பட்டது. பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் சேர்த்து வருவதால் பழமையான இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இப்பள்ளியில் தற்போது 10 மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் படித்து வருகிறார்கள் மற்றும்  ஒரு ஆசிரியை  உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  இந்த கட்டிடத்தை அரசு கவனிக்காத காரணத்தினால் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது.  பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் தவறிவிட்ட காரணத்தினால் தான் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

  மேலும் இப்பள்ளியில்  மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் கடந்த 7 ஆண்டுகளுக்கு  முன் மின்சேவை துண்டிக்கப்பட்டது இன்னும் கொடுக்கப்படவில்லை  இதனால் திறந்த வெளியில் பாடம் நடத்தப்பட்டது. மழைக்காலத்தில் வகுப்பறைக்குள் மண்ணெண்ணெய் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஆசிரியை பாடம் நடத்த வேண்டிய   நிலையும் உருவானது, தற்போது அருகில் உள்ள  வேறு பள்ளியில் மாணவர்கள் அமரவைக்கப்பட்டு  பாடம் நடத்தபடும் நிலையில் இப்பள்ளியை மூட அரசு முடிவு எடுத்துள்ளது. தொன்மையின் அடையாளமாக திகழும் அரசு தமிழ் பள்ளியை மூடும் முடிவை  கைவிட்டு தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சில சமூக ஆர்வலர்கள்  கோரிக்கைகளை  விடுத்திருக்கின்றனர்.  இம்முடிவை கைவிடாவிட்டால் தாங்கள் போராட்டம் நடத்த தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

Related Stories: