×

4வது முறையாக ஒரே ஆண்டில் 50 விக்கெட்: அஸ்வினுக்கு பங்கர், பார்த்திவ் பாராட்டு

மும்பை: நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் எடுத்தார். இந்த ஆண்டில் அவர் 8 டெஸ்ட்டில் 51 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் ஷாகின் ஷா அப்ரிடி 9 டெஸ்ட்டில் 44 விக்கெட் எடுத்து அடுத்த இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இதுவரை 426 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 4வது முறையாக ஒரே ஆண்டில் 50 பிளஸ் விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே 2015, 16, 17ம் ஆண்டுகளில் 50 பிளஸ் விக்கெட் எடுத்திருந்தார். இந்த வரிசையில் கும்ப்ளே, ஹர்பஜன்சிங் ஆகியோர் 3 முறை ஒரு ஆண்டில் 50 பிளஸ் விக்கெட் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் புதிய சாதனை படைத்த அஸ்வினை முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் பட்டேல் பாராட்டி உள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், பேட்ஸ்மேன்கள் அடிக்கடி சதம் பற்றி பேசுவார்கள். ஆனால் அஸ்வினுக்கு 50 விக்கெட் கூட ஸ்பெஷல் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஒரு பவுலரும் நிகழ்த்தாத சாதனையை படைத்துள்ளார். அத்தகைய 50 விக்கெட் சூப்பர் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர், அளித்துள்ள பேட்டியில், அஸ்வின் நீண்ட காலமாக உடற்தகுதியுடன் இருந்தால் முரளிதரனின் சாதனைக்கு சவால் விடலாம், ஏனெனில் முத்தையா முரளிதரனே தனது சாதனையை யாராவது முறியடிக்க முடியும் என்றால் அது அஸ்வினாகத்தான் இருக்கும் என கூறி உள்ளார். அவர் பந்துவீசும் விதம் மற்றும் நீண்ட ஸ்பெல்களை வீசும் விதம், டி20 கிரிக்கெட்டிலும் மீண்டும் வந்திருப்பதால் இது அவரது இரண்டாவது விங் என்பதை நாம் தாமதமாகப் பார்த்தோம். அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது தனது ஆஃப் ஸ்பின் மீது அதிக கவனம் செலுத்தினார்.

எனவே அவர் அந்த மைல்கல்லையும் கடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் நன்றாக இருப்பதாக நான் உணர்கிறேன், என தெரிவித்துள்ளார். இதேபோல் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, ”இது நம்பமுடியாதது, ஏனென்றால் இடையில் நான்கு டெஸ்ட்டில் (இங்கிலாந்து தொடர்) அவர் விளையாடவில்லை. காயம் காரணமாக ஆஸி.க்கு எதிராக பிரிஸ்பேன் டெஸ்டிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டில் 5 போட்டிகளைத் தவறவிட்ட பிறகும் அவர் ஒரு வருடத்தில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், என பாராட்டி உள்ளார்.

Tags : Bunker ,Parthiv ,Ashwin , 50 wickets for the 4th time in a single year: Bunker, Parthiv praise for Ashwin
× RELATED டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்: அஷ்வினுக்கு பாராட்டு விழா