தாம்பரம் மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தல்: ஆணையரிடம் மனு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பூங்கா, சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட 7 அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று மாநகராட்சி ஆணையரை சந்தித்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, சமீபத்தில் தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு உள்ளது. இம்மாநகராட்சியின் முதல் ஆணையராக டாக்டர் எம்.இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்று உள்ளார்.

இந்நிலையில், பல்லாவரம் குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம் சார்பில் செயலாளர் சி.முருகையன், தலைவர் எம்.சி.பலராமன், பொருளாளர் சி.அரசி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனை நேரில் சந்தித்தனர். அப்போது தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அம்மனுவில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு தேவையான நீர்வழித் தடங்களை பாதுகாக்கவும், சேதமான சாலைகளை செப்பனிடவும், மழைநீர் மற்றும் பாதாள சாக்கடை கால்வாய்களை முறையாக பராமரிப்பு செய்திடவும், அனைத்து பூங்காக்கள் பராமரிப்பு, சீரான குடிநீர் வினியோகம்,

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், குறிப்பிட்ட இடைவெளியில் மக்களின் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்பட 7 கோரிக்கைகளை நலச்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.  இதைத் தொடர்ந்து, தங்களின் பகுதிகளில் உள்ள குறைகளை போன், வாட்ஸ்அப், இமெயில் ஆகியவற்றின் மூலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். தாமதமாகும் பணிகள் குறித்து என் பார்வைக்கு வரும்போது, அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பேன் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உறுதி தெரிவித்தார்.

Related Stories: