மருத்துவக்கல்லூரி விடுதியில் ராகிங்; 2 வார்டன்கள் அதிரடி மாற்றம்: தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு தீவிர சிகிச்சை

தர்மபுரி: நாமக்கல்லை சேர்ந்த வெங்கடாசலம் மகன் சரவணன் (20). இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் விடுதியில் தங்கி 2ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவருடன் 200 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். கடந்த 23ம் தேதி இரவு, விடுதியில் வைத்து 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், சரவணனை ராகிங் செய்து கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட மாணவன் ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சீனியர் மாணவர்கள் மிரட்டியதால், மாணவர் புகாரை வாபஸ் பெற்றுள்ளார். இந்த விடுதி வார்டன் பொறுப்பில் உள்ள இளவரசன் என்பவர், பெத்தலாஜி என்ற பாடப்பிரிவு பேராசிரியராக உள்ளார். இவர், புகார் தெரிவித்த மாணவரை பெத்தாலஜி பாடத்தில் பெயிலாக்கி உள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த மாணவர், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை தொடர்ச்சியாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

அவரை சக மாணவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 23ம் தேதி இரவு விடுதியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 4 பேர், சரவணனை அழைத்து ராகிங் செய்துள்ளனர். அப்போது, முட்டி போட்டவாறு நடக்க வைத்துள்ளனர். மேலும், ஜட்டியுடன் நிற்க வைத்து மர்ம உறுப்பில் காலி பாட்டில் வைத்து நடக்கவும் சொல்லியுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதில், சரவணனை கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். இதனை விடுதி வார்டன்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து டீன் அமுதவள்ளி கூறுகையில், `விடுதியில் ராகிங் நடைபெற்றதை அறிந்ததும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் 4 பேரையும், விடுதியில் இருந்து வெளியேற்றி விட்டோம். இன்று முதல் ஒரு வாரத்திற்கு சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி விடுதியில் உள்ள 2 வார்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர் சரவணன் மனஉளைச்சலில் உள்ளதால், அவர் உடல்நலம் முன்னேறும் வரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: