நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: ஒன்றிய அரசு வருத்தம் தெரிவிப்பதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

டெல்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒன்றிய அரசு வருத்தம் தெரிவிப்பதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி தொடங்கிய முதல் நாளில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், வேளாண் சட்டம் வாபஸ் பெற்றது தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தியும், ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் மீதான உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.

அப்போது நேற்று முன்தினம் நாகாலாந்தில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் துணை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பிக்கள் மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர். இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் விவாதிக்க கோரி எம்பிக்கள் சுகேந்து சேகர் ராய், மனோஜ் ஜா ஆகியோரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். மேலும் நாகாலாந்து சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நாகாலாந்து பிரச்னை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவைக்கு வந்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றார். அப்போது குறிக்கிட்ட அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, ‘மாநிலங்களவையில் நாகாலாந்து சம்பவம் குறித்து இன்று மாலை அமித் ஷா பதில் அளிப்பார்’ என்றார். இருந்தும் எதிர்கட்சி எம்பிக்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல் மக்களவையிலும், நாகாலாந்து விவகாரம் குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘நாகாலாந்து விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவான தகவல்களை அவையில் இன்று மாலை அளிப்பார்’ என்று தெரிவித்தார். கூச்சல் குழப்பம் நீடித்ததால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் 12 மணிக்கு மேல் தொடங்கின. மீண்டும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர்; நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவம் மன்னிப்பு கோரியது. தவறான கணிப்பால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மக்களும் தவறாக புரிந்து கொண்டு பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நாகாலாந்தில் பதற்றம் நிலவினாலும் சூழ்நிலை தற்போது கட்டுக்குள் உள்ளது. நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவம் உயர்மட்ட விசாரணை நடத்தி வருகிறது. இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகாலாந்தில் இயல்பு நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

Related Stories: