கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தாமல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பு; நடிகர் கமலுக்கு நோட்டீஸ்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: நடிகர் கமலஹாசன், கொரோனா தொற்றுக்குப் பிறகு தனிமைப்படுத்தாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்றுக்கு 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு, 15 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, 35 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர்.

சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இன்னும் தமிழகத்தில் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேரில் ஒருவருக்கு பரிசோதனை செய்த போது அவருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. இருந்தாலும் அவர் கும்பகோணத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்த அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை வார்டுகளை தயார் நிலையில் வைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, பிரத்யேக வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறது. 50,100,150 என்ற வகைகளில் ஆக்சிஜன் வசதி மற்றும் தீவிர சிகிச்சைக்கான வசதி கொண்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் 35 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவும் தற்போது தயார் நிலையில் உள்ளது. அரசு மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 12 இடங்களில் டேக் பாத் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் செயல்பட துவங்கியுள்ளது. இது ஆர்டிபிசிஆர் ஐ கடந்து கொரோனாவில் இருந்து உருமாறும் வைரஸ் தொற்றை கண்டறியும்.

11 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தியிருப்பதால் அந்த நாடுகளில் இருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கை கடந்த ஒருவார காலமாக 28ஆக இருந்தது. வைரஸ் ஆபத்தற்ற நாடுகள் என்று கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து 142 விமான போக்குவரத்து இருந்து வருகிறது. இதில், வைரஸ் ஆபத்தான நாடுகளில் இருந்து வருபவர்களில் இதுவரை 5,249 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டது. ஆபத்தற்ற நாடுகளில் இருந்து வந்த 609 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டது. மொத்த பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதில், 6 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஒமிக்ரான் வேகமாக பரவும் என்று சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. அதேநேரத்தில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மீண்டும் தொற்றுபரவல், ஊரடங்கு என்ற நிலைக்கு செல்லாமல் இருக்க தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டு முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தடுப்பூசி போடும் பணிகள் ஒரு இயக்கமாகவே மாறியுள்ளது. அதன்படி, முதல் தவணை தடுப்பூசி 80.44 சதவீதம் பேருக்கும், 2ம் தவணை தடுப்பூசி 47.46 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை வழக்கம் போல் 14வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் தமிழகம் முழுவதும் நடைபெறும். தடுப்பூசி குறைவாக போட்டுக்கொண்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது. அதிகமான தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளில் பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு என்பது 100க்கும் கீழ் உள்ளது. எனவே, தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘‘நடிகர் கமல் கொரோனா தொற்றுக்குப் பிறகு தனிமைப் படுத்தாமல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்’’ என்றார்.

Related Stories: