டெல்லியில் இந்தியா-ரஷ்யா உச்சிமாநாடு; 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: மோடி-புடின் சந்தித்து ஆலோசனை

புதுடெல்லி: டெல்லியில் இந்தியா-ரஷ்யா இடையிலான உச்சிமாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கிடையே முக்கிய 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இந்தியா - ரஷ்யா இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த மாநாடு நடக்கவில்லை. இந்நிலையில் இன்று டெல்லியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. அதனால், தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே ஷோய்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரும் வந்துள்ளனர். முன்னதாக இன்று காலை 10.30 மணிக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் - ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே ஷோய்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மட்டத்திலான ‘2+2’ நிலையிலான பேச்சுவார்த்தைகள் நடந்தன.

 இன்று மாலை 3 மணியளவில் மாஸ்கோவில் இருந்து டெல்லி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான 21வது ஆண்டு இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு நடக்கிறது. அப்போது ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை உட்பட இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், அங்குள்ள நிலைமைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

மேலும் இந்த சந்திப்பின் போது உத்தரபிரதேச மாநிலம் அமேதி அடுத்த கோர்வாவில் ஏகே-203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் நிறுவனம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரஷ்யாவின் ரோசோபோரோனெக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து ₹5,100 கோடி மதிப்புள்ள திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. அதேபோல் ராணுவம், வணிகம், முதலீடு, தொழில்நுட்பம், விண்வெளி,  அறிவியல், பாதுகாப்பு, மின் உற்பத்தி, கலாசாரம் ஆகிய துறைகள் தொடர்பாக 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சில ஒப்பந்தங்கள் ரகசியமானது என்றும், இருநாட்டு உறவுகளின் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் மாதிரியை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளதாக தனியார் ஏஜென்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கான கையெழுத்து இன்று நடக்காது என்று கூறப்பட்டுள்ளது. இருநாட்டு தலைவர்கள் தலைமையில் நடைபெறும் உச்சிமாநாடு நிகழ்ச்சி முடிவுற்றவுடன் இன்றிரவு 7.30 மணியளவில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இரவு 9 மணிக்குள் இரு தலைவர்கள் முன்னிலையில் கூட்டறிக்கை வெளியிடப்படும். இரவு 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து அதிபர் புடின் ரஷ்யா புறப்பட்டு செல்ல உள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ஜாம்’ ஆகும் துப்பாக்கிகள்

எல்லை பாதுகாப்பிற்காக இந்திய ராணுவ வீரர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஐஎன்எஸ்ஏஎஸ் (India Small Arms System) ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தனர். இந்த வகை துப்பாக்கிகள் திருச்சி, கான்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் இச்சாபூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தும் போது வீரர்கள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தனர். கார்கில் போரின் போதும் ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக்கிகள் ஜாம் ஆவதாக புகார்கள் எழுந்தன. அதன் பின்னர் ராணுவ வீரர்கள் ஏ-47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்த தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகே-203 ரக துப்பாக்கிகள்

மோடி - புடினின் இன்றைய சந்திப்பின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது, உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஏகே-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்கும் திட்டம்தான். இந்த புதிய ரக துப்பாக்கியானது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக இருக்கும். இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகளில் கிட்டத்தட்ட 7.5 லட்சம் துப்பாக்கிகளை இந்திய ராணுவமே கொள்முதல் செய்ய உள்ளது. ஏகே-203 ரக துப்பாக்கிகளின் எடை 3.8 கிலோ எடையும், 705 மிமீ நீளமும் உடையது. அதே ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கியின் நீளம் 960 மி.மீ ஆகும்.

இந்த துப்பாக்கியில் 20 குண்டுகளையும் ஏகே-203 துப்பாக்கியில் 30 குண்டுகளையும் பொறுத்த முடியும். ஐஏஎஸ்ஏஎஸ் துப்பாக்கியின் குறி வைக்கும் தொலைவு 400 மீட்டர்; ஆனால் ஏகே-203 துப்பாக்கியில் 800 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் குறி வைக்க முடியும். இந்த தொழிற்சாலையை அமேதியில் கொண்டு வருவதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும், சிறு குறு நிறுவனங்களுக்கு மூலப்பொருள் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தமும் கிடைக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: