முதுகுளத்தூர் அருகே கல்லூரி மாணவர் மர்ம சாவு-உறவினர்கள் சாலை மறியல்

சாயல்குடி : முதுகுளத்தூர் அருகே கல்லூரி மாணவர் மர்மமாக இறந்தார். போலீசார் தாக்கியதில் தான் மாணவர் இறந்தார் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (21). கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில் மணிகண்டன் இறந்து விட்டதாக கூறினர்.

நேற்று காலை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டன் உடலை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். அப்போது உறவினர்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற மணிகண்டனை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் இறந்ததாக கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

அவர்களுடன், ராமநாதபுரம் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி திருமலை, டிஎஸ்பி ஜான் பிரிட்டோர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது சமரசத்துக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. மணிகண்டன் உறவினர்கள், ‘‘எஸ்.பி நேரடியாக விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக மணிகண்டன் வந்து, செல்லும் கேமரா பதிவுகள் உள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் இறப்பு குறித்து முழுமையான முடிவுகள் தெரிய வரும்’’ என்றனர்.

Related Stories:

More