அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது பாதைக்கு தொடர்பில்லாத இடத்தில் பாலம்-விவசாயிகள், கிராமத்தினர் பாதிப்பு

சிவகங்கை : கல்லல் அருகே பாகனேரியில் தொடர்பில்லாத இடத்தில் பாலத்தை கட்டியதால் கிராம மக்கள், விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். கல்லல் அருகே பாகனேரி கிராமத்தில் குருக்கா கண்மாய் உள்ளது. சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் இக்கண்மாயில் இருந்து பாசன வசதி பெருகின்றன. சமீபத்திய தொடர் மழையால் இக்கண்மாய் நிறைந்து மறுகால் செல்கிறது. இக்கண்மாய் கரையில் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், மயானத்திற்கு செல்ல மண் பாதை உள்ளது. மழைக்காலத்தில் கண்மாயில் இருந்து நீர் வெளியேறினால் இந்த பாதையில் செல்ல முடியாது என்பதால் பல ஆண்டுகளாக விவசாயிகள், கிராமத்தினர் இந்த பாதையில் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து தூம்பு பாலம் கட்டுவதற்கு ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி நடந்தது. ஆனால் பாதையில் பாலம் கட்டாமல் அதற்கு தொடர்பில்லாத இடத்தில் அவசரகதியில் பாலம் கட்டப்பட்டது. தற்போதைய மழையில் இவ்வழியே மழை நீர் செல்வதால் இப்பாதை வழியே இக்கண்மாய்க்கான விவசாய நிலங்கள், மயானம் உள்ளிட்டவற்றிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாலம் கட்டியும் பயனில்லாமல் உள்ளது.

கிராமத்தினர் கூறுகையில், மழை நீர் செல்லும் போது இவ்வழியே மயானத்திற்கு இறந்த உடலை தூக்கி செல்வது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதுபோல் கால்நடைகளை விவசாய நிலப்பகுதிக்கு கொண்டு செல்வது, விவசாயத்திற்கான இடுபொருட்களை கொண்டு செல்வதிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்காகவே பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் பாதைக்கு சம்பந்தமில்லாமல் பாலத்தை கட்டி அரசு பணத்தை வீணடித்துள்ளனர். பாதைக்கு தொடர்பில்லாமல் தனியாக நாடக மேடை போல் நிற்கும் இந்த பாலத்திற்கு அதிகாரிகள் எப்படி அனுமதி அளித்தார்கள் என தெரியவில்லை. தற்போது கண்மாய் நிறைந்து மறுகால் பாயும் நிலையில் பாதைக்கு பாலம் வேண்டும் அல்லது பாலத்திற்கு பாதை வேண்டும் என்றனர்.

Related Stories: